கைருடின் தண்டிக்கப்பட்டால், முஹிடின் செல்வாக்கு அதிகரிக்கும்

இராகவன் கருப்பையா – கடந்த இரு வாரங்களாக நாடு தழுவிய நிலையில் அதிகம் பேசப்பட்டு, சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு, ஊடகங்களில் பிரசுரிக்கப்பட்டுவரும் விஷயங்களில் முதலிடத்தில் இருப்பது பாஸ் கட்சியைச் சேர்ந்த மத்திய அமைச்சர் கைருடினைப் பற்றித்தான் என்பதில் ஐயமில்லை.

தோட்டத்தொழில் மூலப்பொருள் அமைச்சரான அவர் கோவிட்-19 தொடர்பான நிர்ணயிக்கப்பட்ட நடைமுறையை பின்பற்றாமல் தான்தோன்றித்தனமாகத் திரிவதுதான் எல்லாருக்குமே அதிர்ச்சியளிக்கும் ஒன்றாகும்.

அதற்கு அப்பாற்பட்டு, மிகப் பகிரங்கமாகவே இக்குற்றத்தைப் புரிந்த அவருக்கு எதிராக முறையான நடவடிக்கை எடுப்பதில் அரசாங்கம் ஏன் மெத்தனமாக இருக்கிறது என்பதுதான் ஒட்டுமொத்த மக்களின் ஆதங்கமுமாகும்.

கடந்த மாதத் தொடக்கத்தில் துருக்கி நாட்டுக்குச் சென்றிருந்த அவர் 7ஆம் தேதியன்று நாடு திரும்பினார். நிர்ணயிக்கப்பட்ட நடைமுறை படி 14 நாட்களுக்குத் தன்னைத் தானே தனிமைப்படுத்திக் கொண்டிருக்க வேண்டிய அவர் கிஞ்சிற்றும் அந்த விதிமுறையைச் சட்டை பண்ணாமல் வழக்கமான பணிகளில் ஈடுபட்டிருந்தார் – நாடாளுமன்றக் கூட்டத் தொடரில் கலந்துகொண்டது உள்பட.

கடந்த 18ஆம் தேதியன்று முன்னாள் அமைச்சர் தெரேசா கொக் நாடாளுமன்றத்தில் இது குறித்து கேள்வி எழுப்பும் வரையில் சம்பந்தப்பட்ட அதிகாரிகளும் கூட இந்த விவகாரத்தில் கண்டும் காணாததைப் போல இருந்தது பொது மக்களுக்கு எரிச்சலையே ஏற்படுத்தியது.

துருக்கியில் இதுவரையில் இரண்டரை இலட்சத்திற்கும் மேற்பட்டோர் கோவிட்-19 நோயினால் பாதிக்கப்பட்டுள்ள வேளையில் 6 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் மரணமடைந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இப்படிப்பட்ட ஒரு நாட்டுக்கு இத்தகைய இக்கட்டான சூழ்நிலையில் இவர் அங்குச் செல்ல வேண்டிய அவசியமென்ன என எதிர்க்கட்சி உறுப்பினர்கள் மட்டுமின்றி பொது மக்களும் கூட குழம்பித்தான் உள்ளனர். அரசாங்கப் பணி நிமித்தம் இவர் அங்குச் சென்றாரா, தனிப்பட்ட பயணமா, குடும்பத்தோடு சென்றாரா போன்ற கேள்விகளுக்கு இதுவரையில் தெளிவான விளக்கம் ஏதும் இல்லை.

நம் நாட்டில் நிர்ணயிக்கப்பட்ட நடைமுறையைப் பின்பற்றாத பொது மக்களில் நூற்றுக்கணக்கானோர் அவ்வப்போது தண்டிக்கப்படுகின்றனர் – சிறையில் அடைக்கப்படுவது உள்பட. ஆனால் கைருடினுக்கு மட்டும் ஏன் இந்த சிறப்புச் சலுகை என எதிர்க்கட்சி தலைவர்கள் மக்களவையில் மட்டுமின்றி வெளியிலும் கூட ஒருசேரக் குரல் எழுப்பிக்கொண்டுதான் இருக்கின்றனர் இன்று வரையில்.

சுகாதார அமைச்சு அவருக்கு 1,000 ரிங்கிட் அபராதம் விதித்ததைத் தொடர்ந்து பொது மன்னிப்புக் கேட்ட கைருடின், தனது 4 மாத சம்பளத்தை கோவிட்-19 நிதிக்கு வழங்குவதாக அறிவித்தார்.

இருந்த போதிலும் ‘நெற்றிக்கண் திறப்பினும் குற்றம் குற்றமே’ எனும் வசனத்திற்கு ஏற்ப, அவர் அவசியம் நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்டு சட்ட ரீதியில் தண்டிக்கப்பட வேண்டும் என நாடு தழுவிய நிலையில் சுமார் 27 காவல்துறை புகார்கள் செய்யப்பட்டதை தொடர்ந்து பிரதமர் முஹிடினும் கூட அது தொடர்பாக கருத்துரைத்தார்.

சட்டத்தின் முன் எல்லாருமே சமம்தான். நடவடிக்கை எடுக்கும் பொறுப்பை அதிகாரிகளிடமே விட்டுவிடுகிறேன் என்று அவர் குறிப்பிட்டதைத் தொடர்ந்து காவல்துறை விசாரணையைத் தொடக்கியது.

கைருடின் நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்டு 2,000 ரிங்கிட்டுக்கும் மேல் அபராதம் அல்லது 2 ஆண்டு சிறைத்தண்டனை அவருக்கு விதிக்கப்பட்டால் தனது நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை இயல்பாகவே அவர் இழந்துவிடுவார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஏற்கனவே நூலிழையில் ஊசலாடிக்கொண்டிருக்கும் முஹிடின் அரசாங்கத்திற்கு அது பேரிடியாக அமைந்துவிடும் என்பதும் எல்லாரும் அறிந்த ஒன்றுதான். இருப்பினும் இது முஹிடின் அரசியலுக்கு ஒரு திருப்புமுணையாக அமையும்.

கடந்த ஜூலை மாதம் 13ஆம் தேதி கெடா மாநிலத்தில் இதே போன்ற குற்றத்தைப் புரிந்த 57 வயது உணவக உரிமையாளர் ஒருவருக்கு 5 மாத சிறைத் தண்டனையும் 12,000 ரிங்கிட் அபராதமும் விதிக்கப்பட்டதை நாம் இங்கு நினைவுக் கூறத்தான் வேண்டும்.

ஆளும் கூட்டணியைச் சேர்ந்த  பலரும் கைருடினுக்கு ஆதரவாக கருத்துரைத்து வருகிற போதிலும் அம்னோ துணைத் தலைவர் முஹமட் ஹசானும் உச்சமன்ற உறுப்பினர் புவாட் ஸர்காஷியும் மட்டுமே அவர் நீதிமன்றத்தில் நிறுத்தப்பட வேண்டும் என உறுதியாக வலியுறுத்தி வருகின்றனர்.

சுமார் 4 மாதங்களுக்கு முன் அம்னோ தலைவர் அஹ்மட் ஸாஹிட்டின் புதல்வி நடமாட்டக் கட்டுப்பாட்டை மீறி வெளியே உலாவித்திரிந்த போதும் சுகாதாரத் துறை துணை அமைச்சர் உல்லாசமாக விருந்தோம்பல் நிகழ்வில் கலந்துகொண்ட போதும் இதே நிலைதான் ஏற்பட்டதை மக்கள் இன்னும் மறந்திருக்க மாட்டார்கள்.

பொது மக்கள் பொறுமை இழந்து பொங்கி எழுந்த பிறகுதான் அவ்விருவர் மீதும் நடவடிக்கை எடுக்கப்பட்டது.

எனவே ஒவ்வொரு முறையும் அரசியல்வாதிகளும் அவர்களுடைய குடும்பத்தினரும் சட்ட விதிகளை மீறும் போது இயல்பாகவே அவர்கள் மீது பாயவேண்டிய சட்டம் பொது மக்கள் நெருக்குதல் கொடுக்கும் வரை தட்டுத் தடுமாறி நிற்பதுதான் வியப்பாக உள்ளது.

ஆக, ‘மாமியார் உடைத்தால் மண் சட்டி’, மருமகள் உடைத்தால் பொன் சட்டி’ எனும் சொற்றொடருக்கு ஏற்ப அரசாங்கத்தின் இத்தகைய போக்கு முஹிடினின் புதிய ஆட்சிக்கு நீண்டகாலத்தில் பாதகத்தையே கொண்டுவரும் என்பதில் ஐயமில்லை.