ஸ்லிம் இடைத்தேர்தல் வாக்களிப்பு இன்று மந்தமாகவே தொடங்கியது. காலை 11 மணிக்கு 29 சதவிகித வாக்காளர்கள் மட்டுமே வாக்களித்தனர்.
இருப்பினும், 22,749 வாக்காளர்களில் 85 சதவீதத்தினர் மாலை 5.30 மணிக்கு வாக்கெடுப்பு முடிவதற்குள் வாக்களிப்பர் என்ற இலக்கை தேர்தல் ஆணையம் வைத்துள்ளது.
கோவிட்-19 பாதிப்பைத் தொடர்ந்து, வாக்காளர்களுக்கு அந்தந்த வாக்குச் சாவடிகளில் வாக்களிக்க நேர ஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளன.
வாக்குச் சாவடியில், மலேசிய சுகாதார அமைச்சு மற்றும் தேர்தல் ஆணையத்தின் அதிகாரிகள், வாக்காளர்களுக்கு தங்கள் கூடல் இடவெளியை பராமரிக்க நினைவூட்டுவதைக் காண முடிந்தது.
சில வாக்காளர்கள் தங்கள் நேர ஒதுக்கீடுகளை பின்பற்றவில்லை என்றாலும், ஒட்டுமொத்தமாக, நிலையான இயக்க நடைமுறைகளை (எஸ்ஓபி) பின்பற்றுவது அதிகரித்துள்ளது என்றார் தேர்தல் ஆணையத்தின் துணைத் தலைவர் அஸ்மி ஷரோம்.
நோய்வாய்ப்பட்ட அல்லது அதிக உடல் வெப்பநிலையைக் கொண்ட வாக்காளர்களுக்கு தேர்தல் ஆணையம் முதல் முறையாக சிறப்பு வாக்களிப்பு தடங்களை வழங்கியுள்ளது. இதை தனிப்பட்ட பாதுகாப்பு உபகரணங்களை அணிந்த ஊழியர்கள் கண்காணிக்கின்றனர்.
ஸ்லிம் இடைத்தேர்தல் மும்முனைப் போட்டியில் பாரிசான் வேட்பாளர் முகமட் ஜைதி அஜீஸ், அமீர் குஸ்யாரி முகமட் தனுசி மற்றும் மற்றொரு சுயேட்சை வேட்பாளர் சந்தரசேகரன் ஆகியோர் போட்டியிடுகின்றனர்.
கடந்த ஜூலை 15 ஆம் தேதி மாரடைப்பு காரணமாக பாரிசானைச் சேர்ந்த அதன் நாடாளுமன்ற உறுப்பினர் முகமட் குசைரி அப்துல் தாலிப் இறந்ததைத் தொடர்ந்து இந்த இடைத்தேர்தல் நடைபெறுகிறது.