தேசிய கூட்டணியின் சின்னம் அறிமுகம்

சபா மாநிலத் தேர்தலில் பயன்படுத்தப்படுவதாக நம்பப்படும் தேசிய கூட்டணியின் சின்னம் இன்று வெளியிடப்பட்டது.

நீல நிற பின்னணியில் வெள்ளை எழுத்துடன் கூட்டணியின் பெயரைக் கொண்ட சின்னத்தை பெர்சத்து கட்சியின் தலைவர் முகிதீன் யாசின் இன்று சபாவில் கட்சித் தலைவர்களுடனான சந்திப்பில் வெளியிட்டார்.

தேசிய கூட்டணி அறிமுக விழா ரத்து செய்யப்பட்டதாக கூறப்பட்ட பின்னர் இந்நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

“முன்னதாக தேர்தல் ஆணையத்தின் ஒப்புதல் கிடைக்காததால் அந்நிகழ்வு ரத்து செய்யப்பட்டது.”

“ஆனால் இன்று தேர்தல் ஆணையத்திடமிருந்து முகிதீனுக்கு வந்த அழைப்பின் வழி சபா தேர்தலில் சின்னத்தைப் பயன்படுத்த தேர்தல் ஆணையம் ஒப்புதல் அளித்துள்ளது” என்று அந்த ஆதாரம் மலேசியாகினியிடம் கூறியது.

தேசிய கூட்டணி அறிமுக விழா மீண்டும் விரைவில் ஏற்பாடு செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சின்னத்தை எத்தனை கட்சிகள் பயன்படுத்தும் என்பது தெளிவாகத் தெரியவில்லை.

தற்போது, செர்சத்து, பாஸ் மற்றும் இரண்டு சபா கட்சிகளான பார்ட்டி மஜு சபா (எஸ்ஏபிபி) மற்றும் பார்ட்டி சோலிடரிட்டி தனா ஆயேர்கு (ஸ்டார்) ஆகிய நான்கு கட்சிகளும் தேசிய கூட்டணியில் இணையும் என்று நம்பப்படுகிறது. இருப்பினும், பாஸ் நேற்று பாரிசான் சின்னத்தை பயன்படுத்துவதாக கூறியது.

இன்று சபாவில் அதிகாரப்பூர்வமாக தேசிய கூட்டணி தொடங்க திட்டமிடப்பட்டது.

முகமது அஸ்மின் அலியின் முகாமுக்கு இட ஒதுக்கீடு அளிப்பதற்கான பேச்சுவார்த்தைகள் காரணமாக அம்னோவிற்கும் பெர்சத்துவிற்கும் இடையிலான கருத்துவேறுபாடு காரணமாகவும், அதேபோல் சபாவில் உள்ள கட்சிகளும் இக்கூட்டணியில் சேருவது குறித்து இன்னும் பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டுள்ளதாலும், .இந்த திட்டம் ஒத்திவைக்கப்பட்டதாக கூறப்படுகிறது.