கோவிட்-19: மற்றொரு இறப்பு, ஆறு புதிய பாதிப்புகள்

ஆறு புதிய கோவிட்-19 பாதிப்புகளும் ஓர் இறப்பும் இன்று பதிவாகியுள்ளதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது. இந்த மாதத்தில் இரண்டு இறப்புகள் நிகழ்ந்துள்ளன.

சமீபத்திய இறப்பு, கெடாவில் உள்ள தாவார் திரளையில் இருந்து 62 வயதான மூத்த குடிமகன் (‘நோயாளி 9124’) சம்பந்தப்பட்டதாக சுகாதார இயக்குநர் டாக்டர் நூர் ஹிஷாம் அப்துல்லா தெரிவித்தார்.

இறந்தவர், குறியீட்டு பாதிப்பின் (‘நோயாளி 9113’) சகோதரர் ஆவார்.

பாதிக்கப்பட்டவர் ஆகஸ்ட் 11 முதல் இருமல் அறிகுறிகளை அனுபவிக்கத் தொடங்கினார் என்றும், கோவிட்-19க்கு சாதகமாக கண்டறியப்பட்ட பின்னர் ஆகஸ்ட் 13 ஆம் தேதி அலோர் செட்டாரில் உள்ள சுல்தானா பஹியா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் என்றும் நூர் ஹிஷாம் கூறினார்.

நோயாளிக்கு நீரிழிவு நோய் மற்றும் உயர் இரத்த அழுத்த நோய் வரலாறும் இருந்துள்ளது.

“அவரது உடல்நிலை மோசமடைந்து, ஆகஸ்ட் 19, 2020 முதல் அவருக்கு சுவாச உதவி தேவைப்பட்டது. ஆகஸ்ட் 30, 2020 அன்று இரவு 10.35 மணிக்கு அவர் இறந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டது,” என்று அவர் இன்று ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.

கோவிட்-19 காரணமாக ஏற்பட்ட மொத்த இறப்புகளின் எண்ணிக்கையை இது 127 ஆக கொண்டுவருகிறது. இரண்டு நாட்களில் இரண்டாவது மரணமாகும்.

இதற்கு முந்தைய நாள், அதே மருத்துவமனையில் கோவிட்-19 இன் விளைவாக ‘நோயாளி 9290’ இறந்துவிட்டதாக தெரிவிக்கப்பட்டது.

தீவிர சிகிச்சை பிரிவில் (ஐ.சி.யூ) ஆறு நோயாளிகள் இன்னும் சிகிச்சை பெற்று வருவதாகவும், அவர்களில் நான்கு பேருக்கு சுவாச உதவி தேவைப்படுகிறது என்றும் நூர் ஹிஷாம் கூறினார்.

இதற்கிடையில், ஆறு புதிய பாதிப்புகளில், இரண்டு உள்நாட்டு பாதிப்புகளாகும்.

இரண்டு பாதிப்புகளும் கெடாவில் தாவார் திரளை மற்றும் தெலாகா திரளைகளில் பதிவாகியுள்ளன.

தாவர் திரளையில் இருந்து இதுவரை 74 பாதிப்புகள் கண்டறியப்பட்டுள்ளன.

நேற்று முதன் முதலில் அறிவிக்கப்பட்ட தெலாகா திரளையிலிருந்து சமீபத்திய பாதிப்பு உட்பட, ஐந்து நேர்மறையான பாதிப்புகளை பதிவு செய்தது.

“இந்த தெலாகா திரளை, முதன்முதலில் ஆகஸ்ட் 30, 2020 அன்று மருத்துவமனை ஊழியர்கள் சம்பந்தப்பட்ட இரண்டு நேர்மறையான பாதிப்புகளுடன் (நோயாளி 9284, அதாவது குறியீட்டு பாதிப்பு மற்றும் நோயாளி 9334) பதிவாகியது.

“இருப்பினும், மேலதிக விசாரணையின் முடிவுகள், இதற்கு முன்னதாக பதிவாகிய கோவிட்-19 இன் இரண்டு நேர்மறையான பாதிப்புகள் (9306 மற்றும் 9291) குறியீட்டு பாதிப்புடன் நெருங்கிய தொடர்பை கொண்டதாகக் கண்டறியப்பட்டது.

“இது இந்த திரளையில் நேர்மறையாகக் கண்டறியப்பட்ட கோவிட்-19 பாதிப்புகளின் எண்ணிக்கையை ஐந்தாகக் கொண்டுவருகிறது,” என்று அவர் கூறினார்.

இதற்கிடையில், போர்ட் டிக்சன் துறைமுகத்தில் ஒரு கப்பலின் குழுவினர் சம்பந்தப்பட்ட ஒரு புதிய திரளை இருப்பதாக நூர் ஹிஷாம் கூறினார்.

அந்த கப்பலுக்கு சிங்கப்பூர் துறைமுகத்திலிருந்து வந்த பயண வரலாறு இருப்பதாக அவர் கூறினார்.

ஆகஸ்ட் 28 அன்று, கப்பலில் மொத்தம் 34 பணியாளர்கள் சோதிக்கப்பட்டனர்.

இவற்றில், நான்கு பேர் நேர்மறையாகவும், ஆறு நபர்கள் எதிர்மறையாகவும் கண்டறியப்பட்டனர். அதே நேரத்தில், மேலும் 24 நபர்கள் இன்னும் முடிவுகளுக்காக காத்திருக்கிறார்கள்.

“இந்த நான்கு நேர்மறையான பாதிப்புகளும் அறிகுறிகளை காட்டவில்லை, ஆரம்பத்தில் சிலாங்கூரில் உள்ள ஒரு தங்கும் விடுதியில் தனிமைப்படுத்தப்பட்டனர்.”

“நேர்மறையாக பரிசோதிக்கப்பட்ட பின்னர், அவர்கள் சிலாங்கூரின் சுங்கை புலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். ஆகையால், அவர்கள் சமூகத்தில் தொற்றுநோய்க்கான அபாயத்தை ஏற்படுத்தவில்லை.”

இந்த புதிய பாதிப்புகள் நாட்டின் மொத்த கோவிட்-19 பாதிப்புகளின் எண்ணிக்கையை 9,340 ஆகக் கொண்டுவருகிறது.

இதற்கிடையில், ஆறு நோயாளிகள் முழுமையாக குணமடைந்து மருத்துவமனையில் இருந்து வெளியேற்றப்பட்டதாக நூர் ஹிஷாம் தெரிவித்தார்.