13 கைதிகளுக்கு முன்கூட்டி விடுதலை அளிக்கிறார் மாமன்னர்

இன்று 63வது தேசிய தின கொண்டாட்டத்துடன் இணைந்து மலேசியாவின் பல சிறைகளில் உள்ள 13 கைதிகளுக்கு மன்னிப்பு அளித்து முன்கூட்டியே விடுதலை வழங்க மாமன்னர் அல்-சுல்தான் அப்துல்லா ரியாதுதீன் அல்-முஸ்தபா பில்லா ஷா ஒப்புக் கொண்டார்.

மாமன்னர் அல்லது அரசர் அல்லது மாநில ஆளுநரை எதிர்த்த அல்லது எதிர்க்க முயன்ற அல்லது எதிர்க்க தூண்டிய குற்றங்களுக்காக தண்டனைச் சட்டத்தின் 121வது பிரிவின் கீழ் கோலாலம்பூர் உயர்நீதிமன்றத்தால் டிசம்பர் 28, 2001 அன்று அக்கைதிகள் குற்றவாளிகள் என நிரூபிக்கப்பட்டு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டனர்.

2001 முதல் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட 13 கைதிகளும் மன்னிப்பு கோரியுள்ளனர் என்று ஒரு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது. நன்நடத்தையைக் காட்டியவர்களுக்கு மீண்டும் சமுதாயத்தின் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பி சிறந்த மனிதர்களாக மாறுவதற்கான வாய்ப்புகளை வழங்குவதையே இந்த முன்கூட்டி விடுதலைக்கான ஒப்புதல் நோக்கமாகக் கொண்டுள்ளது என்று அரண்மனை தரப்பின் அஹ்மட் ஃபாடில் கூறினார்.

“13 கைதிகளும் தங்கள் தவறுகளை உணர்ந்து, தொடர்ந்து மன்னிப்பு கேட்பார்கள் என்றும், கடவுள், அவர்களது குடும்பங்கள் மற்றும் சமூகத்துடனான அவர்களின் உறவின் நிலையை மதிப்பிட்டு உணர்ந்து கொள்வார்கள் என்றும் அல்-சுல்தான் அப்துல்லா நம்பிக்கை கொண்டுள்ளார்” என்று அவர் கூறினார்.

அவர்கள் தங்களின் அன்புக்குரியவர்களுடனும் சமூகத்துடனும் ஒரு புதிய வாழ்க்கையை நன்மை பயக்கும் வகையில் வாழ்வார்கள் என்றும், அவர்கள் ஒவ்வொருவரும் மதம், இனம் மற்றும் நாடு ஆகியவற்றின் மீது அர்ப்பணிப்புடன் செயல்படும் குடிமக்களாக தங்களின் பங்கை வகிப்பார்கள் என்ற நம்பிக்கையையும் மாமன்னர் கொண்டுள்ளதாக கூறினார்.