புதிய ‘’பூங்கா’ திரளை

மலேசிய சுகாதார அமைச்சு இன்று மற்றொரு புதிய கோவிட்-19 திரளையை (‘’பூங்கா’ திரளை/Bunga Cluster) கண்டறிந்துள்ளது. இது நெகேரி செம்பிலான் போர்ட் டிக்சன் துறைமுகத்தில் ஒரு கப்பலின் நான்கு ஊழியர்கள் சம்பந்தப்பட்டதாக அடையாளம் கண்டுள்ளது.

இந்த கப்பலுக்கு சிங்கப்பூர் துறைமுகத்திலிருந்து வந்த பயண வரலாறு இருப்பதாக சுகாதார இயக்குநர் டாக்டர் நூர் ஹிஷாம் அப்துல்லா தெரிவித்தார்.

ஆகஸ்ட் 28 அன்று, கப்பலில் மொத்தம் 34 பணியாளர்கள் சோதிக்கப்பட்டனர். இவற்றில், நான்கு பேர் நேர்மறையாகவும், ஆறு நபர்கள் எதிர்மறையாகவும் கண்டறியப்பட்டனர். அதே நேரத்தில், மேலும் 24 நபர்கள் இன்னும் முடிவுகளுக்காக காத்திருக்கிறார்கள்” என்று அவர் இன்று கோலாலம்பூரில் தெரிவித்தார்.

இதில் நேர்மறையான பாதிப்புகள் இரண்டு மலேசியர் மற்றும் இரண்டு மலேசிய குடிமக்கள் அல்லாதவர்கள் சம்பந்தப்பட்டதாகவும், இந்த நான்கு நேர்மறையான பாதிப்புகளும் அறிகுறிகளை காட்டவில்லை என்றும், ஆரம்பத்தில் சிலாங்கூரில் உள்ள ஒரு தங்கும் விடுதியில் தனிமைப்படுத்தப்பட்டன என்றும் டாக்டர் நூர் ஹிஷாம் கூறினார்.

நேர்மறையாக பரிசோதிக்கப்பட்ட பின்னர், அவர்கள் சிலாங்கூரின் சுங்கை புலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாகவும், அவர்கள் சமூகத்தில் தொற்றுநோய்க்கான அபாயத்தை ஏற்படுத்தவில்லை என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

“கப்பலில் தூய்மைப்படுத்தும் செயல்முறைகள் மற்றும் தொற்றுநோய்களைத் தடுப்பதற்கும் கட்டுப்படுத்துவதற்குமான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. மேலும் நோய்த்தொற்றுக்கான காரணம் இன்னும் விசாரணையில் உள்ளது” என்று அவர் கூறினார்.

இதற்கிடையில், டாக்டர் நூர் ஹிஷாம் அனைத்து மலேசியர்களுக்கும் 63வது தேசிய தின வாழ்த்தை கூறி, நாட்டின் அனைத்து முன்னணி ஊழியர்களுக்கும் தனது பாராட்டுகளைத் தெரிவித்தார்.

“நாட்டையும் உலகத்தையும் அச்சுறுத்தும் எதிரியான கோவிட்-19க்கு எதிராக போராட கடுமையாக உழைக்கும் அனைத்து முன்னணி போராளிகள் மற்றும் திரைக்குப் பின்னால் பணிபுரியும் தொழிலாளர்கள் அனைவருக்கும் சுகாதார அமைச்சு நன்றி தெரிவிக்க விரும்புகிறது.”

“நாம் தொடர்ந்து விடாமுயற்சியுடன் ஒற்றுமையாக இருந்து, இந்த கிருமியின் அச்சுறுத்தலிலிருந்தும் மற்ற எல்லா அச்சுறுத்தல்களிலிருந்தும் மலேசியாவை பாதுகாக்க ஒன்றிணைந்து செயற்படுவோம். ஒன்றாக நாம் நம் தாய்நாட்டை பாதுகாப்போம்,” என்று அவர் கூறினார்.