கோவிட்-19 : சபாவில் புதிய திரளை

இன்று பிற்பகல் நிலவரப்படி, மலேசியாவில் 14 புதிய கோவிட்-19 பாதிப்புகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

14 புதிய பாதிப்புகளில், புதிதாக கண்டறியப்பட்ட திரளையில் இருந்து ஏழு உட்பட ஒன்பது நோய்த்தொற்றுகள் உள்நாட்டில் நிகழ்ந்துள்ளன என்று புத்ராஜெயாவில் இன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில், சுகாதார அமைச்சின் இயக்குநர் டாக்டர் நூர் ஹிஷாம் அப்துல்லா கூறினார்.

“சபாவின் லாஹாட் டத்து மாவட்ட காவல்துறை தலைமையகத்தில் புதிய கைதிகளை சோதித்ததில் ஒரு புதிய திரளை அடையாளம் காணப்பட்டுள்ளது என்பதை சுகாதார அமைச்சு தெரிவிக்க விரும்புகிறது.”

“இதுவரை, ஆகஸ்ட் 28, 2020 அன்று மொத்தம் 50 கைதிகள் சோதிக்கப்பட்டனர். இவர்களில், ஏழு பாதிப்புகள் கோவிட்-19க்கு நேர்மறையாக கண்டறியப்பட்டன; 43 நபர்கள் எதிர்மறையாக கண்டறியப்பட்டனர்,” என்று அவர் கூறினார்.

இந்த சிறைச்சாலை திரளையில் நேர்மறையான பாதிப்புகள் ஆறு சட்டவிரோத குடியேறியவர்கள் மற்றும் ஒரு மலேசியரை உள்ளடக்கியது என்று டாக்டர் நூர் ஹிஷாம் தெரிவித்தார்.

“அவர்கள் லாஹாட் டத்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்” என்று அவர் விளக்கினார்.

இதற்கிடையில், பினாங்கில் உள்ள தாவார் திரளையில் இரண்டாவது நோயாளி இறந்துவிட்டார். இது நான்கு நாட்களில் பதிவு செய்யப்பட்ட மூன்றாவது மரணமாகும்.

ஆகஸ்ட் 15 ஆம் தேதி தாவார் திரளையில் பதிவான நேர்மறையான பாதிப்புகளில் ஒருவரான 80 வயதான மலேசிய பெண், நுரையீரல் புற்றுநோய் மற்றும் உயர் இரத்த அழுத்தத்தின் பின்னணியும் கொண்டவர் என்று டாக்டர் நூர் ஹிஷாம் தெரிவித்தார்.

“ஆகஸ்ட் 6 முதல் காய்ச்சல் மற்றும் மார்பு வலி அறிகுறிகளை அனுபவிக்கத் தொடங்கிய அவர், ஒரு மருத்துவ மையத்தில் அனுமதிக்கப்பட்டார். ஆகஸ்ட் 14 ஆம் தேதி, கோவிட்-19க்கு சாதகமானதாகக் கண்டறியப்பட்ட பின்னர் அவர் பினாங்கு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார்.

“புற்றுநோயால் ஏற்பட்ட சிக்கல்களால் அவரது உடல்நிலை மோசமடைந்து ஆகஸ்ட் 24 முதல் சுவாச உதவி தேவைப்பட்டது. செப்டம்பர் 1 ஆம் தேதி காலை 10.38 மணிக்கு அவர் இறந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டது,” என்று அவர் கூறினார்.