பாஸ் இளைஞர் பிரிவு: தாய்மொழிப் பள்ளிகளை ஒழிக்க வேண்டிய அவசியமில்லை!

தாய்மொழிப் பள்ளிகள் தொடர்ந்து இயங்குவதை பாஸ் இளைஞர்கள் ஆதரிக்கின்றனர் என்றும் ஆனால் அங்கு தேசிய மொழியின் கல்வியும் கற்றலும் மேலும் மேம்படுத்தப்பட வேண்டும் என்றும் கூறியுள்ளனர்.

தேசிய அடையாளத்துடன் மாணவர்களை உருவாக்க தாய்மொழிப் பள்ளிகள் தவறிவிட்ட காரணத்தால் அவைகளை கட்டங்கட்டமாக ஒழிக்க வேண்டும் என்று முன்னதாக பெர்சத்து இளைஞர் பிரிவின் தலைவர் வான் அகமட் பாஹிசால் வான் அகமட் கமால் வலியுறுத்தினார்.

கோலாலம்பூரில் இன்று நடைபெற்ற தேசிய கூட்டணி நிர்வாகத்தின் (பிஎன்) அரை ஆண்டு மாநாட்டில் உரையாற்றிய பாஸ் கட்சியின் இளைஞர் பிரிவு தலைவர் கைரில் நிஜாம் கிருதின், அத்தகைய அறிக்கையை வெளியிட்ட வான் பாஹிசாலை “துணிச்சலானவர்” என்று பாராட்டினார்.

14வது பொதுத்தேர்தலின் போது கோம்பாக்கில் போட்டியிட்ட கைரில், தாய்மொழிப் பள்ளி பிரச்சினையில் தனது நிலைப்பாடும், பாஸ் இளைஞர் பிரிவின் நிலைப்பாடும் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு இருந்து இன்னும் மாறவில்லை என்று கூறினார்.

“அப்பள்ளிகள் ஏற்கனவே உள்ளன. அவைகளை இயங்க விடுங்கள். தாய்மொழிப் பள்ளிகளில் தேசிய கல்வியின் தரத்தையும் மாணவர்களின் வெற்றியையும் நாம் உறுதி செய்ய வேண்டும்.”

“இந்த பள்ளிகள் தேசிய கல்வி முறையின் தரத்தை ஏற்க வேண்டும். அதை வலுப்படுத்த வேண்டிய அவசியம் ஏற்பட்டால், அதையும் செய்ய வேண்டும்,” என்று அவர் தனது உரையில் கூறினார்.

மாநாட்டில், பிரதமர் மற்றும் பெர்சத்து தலைவர் முகிதீன் யாசின் மற்றும் பாஸ் தலைவர் அப்துல் ஹாடி அவாங் ஆகியோரும் உரை நிகழ்த்தினர். அதே விழாவில் வான் பாஹிசாலும் உரை நிகழ்த்தினார்.

தனது கருத்து, “அறிவுசார் கலந்துரையாடலை” ஊக்குவிப்பதற்காக எனவும், அது “அரசியல் முரண்பாடுகளை” தூண்டிவிட எண்ணம் கொண்டிருக்கவில்லை என்றும் விளக்கினார்.

“எனது கருத்துக்கள் மற்ற இனங்களுக்கு எதிரான எண்ணத்தை அடிப்படையாகக் கொண்டவை அல்ல. அது ஒரு முக்கியமான விவாதம் என்று நாங்கள் கருதுகிறோம்.”

“நாம் 63 ஆண்டுகள் சுதந்திரம் அடைந்து இருக்கிறோம், ஆனால் சமூகத்தின் ஒற்றுமை பிரச்சினை இன்னும் மாறவில்லை,” என்று அவர் கூறினார்.

கல்வியாளர் தியோ கோக் சியோங்கின் ஆய்வின் முடிவுகளை மேற்கோள் காட்டிய வான் பாஹிசால், இன ஒற்றுமையை அடைவதில் சில சமரசங்களை செய்ய வேண்டிய அவசியம் உள்ளது என்றார்.

“உண்மையான தேசிய நல்லிணக்கத்தை பெற விரும்பினால் மக்களிடையே தியாகங்கள் இருக்க வேண்டும். மலாய் மக்கள் நிறைய தியாகங்கள் செய்து விட்டனர் என்று நான் நினைக்கிறேன்.”

“நாங்கள் ஜாவி எழுத்தை விட்டுவிட்டோம், நாங்கள் நீண்ட காலமாக மற்ற இனங்களும் ஒன்றாக வாழ ஒரு பரந்த இடத்தை தந்து விட்டோம்.”

“எனவே இது அரசியல் விவாதங்கள் அல்ல, அறிவு பூர்வமாக கவனம் செலுத்தி விவாதிக்க வேண்டிய விசயம்” என்று அவர் கூறினார்.