தமிழீழ விடுதலைப் புலிகளை பயங்கரவாதிகள் பட்டியலில் இருந்து நீக்குமாறு முகிதீனிடம் கேட்டேன் – மகாதீர்

தமிழீழ விடுதலைப் புலி இயக்கத்தை ஒரு பயங்கரவாதக் குழுவாக வகைப்படுத்தப்படக்கூடாது என்று கேட்டு உள்துறை அமைச்சர் முகிதீன் யாசினுக்கு கடிதம் எழுதியதாக முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதீர் முகமது உறுதிப்படுத்தினார்.

“நான் விடுதலைப் புலிகளை ஆதரிக்கவில்லை. அப்பிரச்சினை இலங்கையில் ஏற்பட்டது, இங்கு அல்ல. அவர்கள் மலேசியாவில் அத்தகைய மோசமான செயல்களைச் செய்யாதபோது, தடுப்புப்பட்டியல் வகைப்படுத்தும் நடவடிக்கைகளை எடுக்க வேண்டிய அவசியமில்லை.”

“ஒருவேளை அவர்கள் பணம் திரட்டி இருந்தால், பழைய அரசாங்கத்தின் போதும் அவர்கள் பணம் திரட்டியுள்ளனர்” என்று மகாதீர் இன்று புத்ராஜெயாவில் செய்தியாளர் கூட்டத்தில் கூறினார்.

பிப்ரவரி 12 ஆம் தேதி முகிதீனுக்கு எழுதிய கடிதத்தில், இலங்கை அரசு, விடுதலைப்புலி இயக்கத்தை ஒரு பயங்கரவாத அமைப்பாக கருதாத போது, அதை தொடர்ந்து ஒரு பயங்கரவாத அமைப்பாக பட்டியலிடப்படுவதற்கு எந்த காரணமும் இல்லை என்று மகாதீர் கூறினார்.

கடந்த ஆண்டு, விடுதலைப்புலி இயக்கத்துடன் தொடர்பு வைத்திருந்ததாக இரண்டு டிஏபி சட்டமன்ற உறுப்பினர்கள் உட்பட 12 பேர் கைது செய்யப்பட்டனர்.

இலங்கை இராணுவத்தால் தோற்கடிக்கப்பட்ட பின்னர் 2009-இல் புலிகள் இயக்கம் கலைக்கப்பட்டதால் விமர்சகர்கள் இந்த முடிவு குறித்து கேள்வி எழுப்பினர்.

அதன் பின்னர், 12 பேருக்கு எதிரான குற்றச்சாட்டுகள் கைவிடப்பட்டன. பயங்கரவாத பட்டியலில் இருந்து அந்த இயக்கத்தை நீக்குவதற்கான முடிவு செப்டம்பர் 17 அன்று முடிவு செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டது.

மலேசியாவில் ஹமாஸ் தலைவர்கள் பயங்கரவாத குழுக்கள் என வகைப்படுத்தப்பட்டிருந்தாலும் அவர்கள் ஏன் ஏற்றுக்கொள்ளப்பட்டனர் என்றும் மகாதீர் தனது கடிதத்தில் கேள்வி எழுப்பியுள்ளார்.

“ஹமாஸ் ஒரு பயங்கரவாதக் குழு என்று நான் கூறவில்லை. ஹமாஸ் ஒரு பயங்கரவாதக் குழுவாக அமெரிக்காவால் வரையறுக்கப்பட்டுள்ளது. ஹமாஸ் ஒரு பயங்கரவாதக் குழு என்று உலகம் கூறுகிறது,” என்று அவர் கூறினார்.

ஹமாஸின் மூத்த தலைவர் இஸ்மாயில் ஹனியேயுடன் தான் நட்பு கொண்டுள்ளதாக மகாதீர் கூறினார்.

“ஹமாஸ் தலைவரை நான் ஏன் சந்தித்தேன்? அவர் என்னுடைய நண்பர். இதனால் நான் பயங்கரவாதி ஆகிவிடுவேனா?” என்று அவர் கூறினார்.