பி.கே.ஆர் தலைவர் அன்வார் இப்ராஹிமுடன் பல தசாப்தங்களுக்குப் பிறகு, கட்சியின் முன்னாள் துணைத் தலைவர் அஸ்மின் அலி, அம்னோ மற்றும் பாஸ் கட்சிகளுடன் இணைந்து பணியாற்றுவது இப்போது மிகவும் வசதியாக உள்ளது என்று கூறியுள்ளார்.
அன்வாருக்கும் முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதீர் முகமதுவுக்கும் இடையிலான போட்டியின் நடுவில் இழுத்துச் செல்லப்படுவதில் மற்ற மலேசியர்களைப் போலவே தானும் சோர்வடைந்து இருப்பதாக அனைத்துலக வாணிபம் மற்றும் தொழில்துறை அமைச்சராக இருக்கும் அவர் கூறினார்.
“பாஸ் மற்றும் அம்னோவுடன் இருப்பது குறித்த கேள்விகள் என்னிடம் அடிக்கடி கேட்கப்படும் ஒன்றாகும். அன்வார் இப்ராஹிமுடன் இருப்பதை விட, பாஸ் மற்றும் அம்னோவுடன் இருப்பது எனக்கு அதிக நம்பிக்கையை அளித்துள்ளது என்பதே எனது பதில்.”
“ஒரு நாள் (அல்லது) இரண்டு நாட்கள் அல்ல, பல தசாப்தங்களாக எனக்கு அவரைத் தெரியும். அது முடிந்துவிட்டது” என்று அலோர் செட்டாரில் உள்ள கெடா தேசிய சமூக இயக்க விருந்தில் உரையாற்றியபோது அவர் கூறினார்.
இந்த விவகாரம் அவரை பி.கே.ஆரை விட்டு வெளியேறி, முகிதீன் யாசின் தலைமையில் தேசிய கூட்டணி அரசாங்கத்தை (பி.என்) அமைப்பதற்கு ஆதரவளித்தது. மக்களின் தேவைகளைப் பூர்த்தி செய்யக்கூடிய ஒரு நிலையான அரசாங்கம் என்று அவர் கருதுவதாகக் கூறினார்.
“அடிமட்ட மக்கள் அல்லல்பட்டுக்கொண்டிருக்கிறார்கள், ஆனால், அவரோ (அன்வார்) ‘நான் எப்போது பிரதமராவேன்’ என்று ஒவ்வொரு நாளும் கேட்டுக் கொண்டிருக்கிறார். லங்காவியோ (துன் டாக்டர் மகாதீர் முகமட்) ‘இன்னும் ஆறு மாதங்கள் எனக்கு விட்டுக்கொடுங்கள்’ என்று கூறுகிறார். அதற்கு அன்வார் ஒப்புக்கொள்ளவில்லை. ஒரு தேதியை கொடுங்கள் என்று கோருகிறார்.”
“பிரதமராக யார் விரும்புகிறார்கள் என்பது பற்றி நாம் 20 ஆண்டுகளாக விவாதித்து வருகிறோம், போதும். வேறு வேலை இல்லையா..” என்று அவர் மேலும் கூறினார், அன்வாரும் மகாதீரும் அரசியலில் இருந்து ஓய்வு பெற வேண்டும் என்று கருதுவதாகவும் கூறினார்.