கோலாலம்பூரில் உள்ள விளம்பர பலகைகள் மலாய் மொழியை முக்கிய மொழியாகப் பயன்படுத்த வேண்டும், மற்ற மொழி துணை மொழியாக அனுமதிக்கப்படும் என்று கூட்டரசுப் பிரதேச அமைச்சர் அன்னுவார் மூசா தெரிவித்தார்.
மாண்டரின் மொழியை பிரதான மொழியாகப் பயன்படுத்திய விளம்பர பலகை நேற்று அகற்றப்பட்ட பின்னர் அவர் இதைக் கூறினார்.
கோலாலம்பூர் மாநகராட்சி மன்றத்தின் கூற்றுபடி, விளம்பர பலகைகளை நிறுவுவதற்கு ஒப்புதல் பெறுவதற்கு முன்பு அந்நிறுவனம் ஆரம்பத்தில் மலாய் மொழியில் அவர்களின் விளம்பரத்தை சமர்ப்பித்ததாகக் கூறியது.
அந்நிறுவனம் பின்னர் சீன மொழி விளம்பர பலகைகளைப் பயன்படுத்தியது. ஆனால் அவர்களின் “தவற்றை” உணர்ந்தபின் பலகையை அகற்றியது என்று கோலாலம்பூர் மாநகராட்சி மன்றம் (டி.பி.கே.எல்.) தெரிவித்தது.
இந்த விவகாரம் குறித்து கருத்து தெரிவித்த அன்னுவார், விளம்பர பலகைகளில் பிற மொழி அனுமதிக்கப்படுகிறது என்றும், ஆனால் மலாய் மொழியை விட அவை சிறியதாக இருக்க வேண்டும் என்றும் கூறினார்.
இதேபோல், எம்.சி.ஏ. இளைஞர் துணைத் தலைவர் சுவா ஹாக் குவான், இருமொழி விளம்பரம் ஒரு பிரச்சனையல்ல என்று தனக்கு டி.பி.கே.எல் உறுதியளித்ததாகக் கூறினார்.
“இருப்பினும், நாட்டின் அதிகாரப்பூர்வ மொழியாக அதன் அந்தஸ்தை மதிக்க, மலாய் மொழி முக்கிய மொழியாக இருக்க வேண்டும்,” என்று சுவா ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளார்.