வாரிசான் சின்னத்தில் போட்டியிடுகிறது டிஏபி!

அடுத்த சபா மாநில தேர்தலில் டிஏபி வேட்பாளர்கள் தங்கள் சொந்த கட்சி சின்னத்தை பயன்படுத்த மாட்டார்கள். அதற்கு பதிலாக வாரிசான் சின்னத்தின் கீழ் அவர்கள் போட்டியிடுவார்கள்.

இம்முடிவு டிஏபி மத்திய செயற்குழுவின் கடினமான ஒன்று என்று கூறிய கட்சியின் பொதுச்செயலாளர் லிம் குவான் எங், கூட்டு சின்னத்துடன் போட்டியிட வேண்டும் என்ற சபா டிஏபி குழுவின் கோரிக்கையை நிறைவேற்றும் நோக்கில் இது ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது என்றார்.

“சபா மாநில டிஏபி குழு, சபாவில் உள்ள எங்கள் உறுப்பினர்கள் மற்றும் ஆதரவாளர்களின் விருப்பத்திற்கு மதிப்பளித்து, அடுத்த மாநிலத் தேர்தலில் அனைத்து சபா டிஏபி வேட்பாளர்களும் சபா வாரிசான் கட்சி கொடியின் கீழ் போட்டியிடுவார்கள் என்பதை இதன்மூலம் அறிவிக்கிறேன்” என்று அவர் இன்று ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

வரவிருக்கும் மாநிலத் தேர்தல் சபாவின் எதிர்காலத்தை நிர்ணயிக்கும் என்றும், பெரிய தாக்கங்களைக் கொண்டிருக்கும் என்றும் லிம் கூறினார்.

“2018 தேர்தலில் வாக்காளர்களின் ஆணைக்கு துரோகம் இழைக்கப்பட்டது. ஒரு தேர்ந்தெடுக்கப்படாத மத்திய அரசாங்கத்தை உருவாக்க வழிவகுத்தது. இது இன மற்றும் மத தீவிரவாத கொள்கைகளை வெட்கமின்றி அனுமதிக்கிறது” என்று லிம் கூறினார்.

வாரிசான் தலைவர் முகமட் ஷாஃபி அப்டாலின் வெற்றி, நம்பிக்கைத் துரோகமான அரசியலை நிராகரிக்கும் சமிக்ஞையாக அமையும்.”

சபாவில் வாரிசனின் வெற்றி, தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கம் “மக்களைப் பாதுகாக்கவும், ஜனநாயகத்தையும் நீதியையும் பாதுகாக்கவும், ஊழலைக் கட்டுப்படுத்தவும், நம் குழந்தைகளின் எதிர்காலத்தைப் பாதுகாக்கவும் வழிவகுக்கும்” என்று மலேசியா முழுவதும் நம்பிக்கையைத் தரும் என்று லிம் கூறினார்.

“இந்தத் தேர்தலில் வெற்றிபெற வாரிசன் பிளஸில் உள்ள எங்கள் கூட்டாளிகளுடன் நாங்கள் கைகோர்த்து செயல்படும் இவ்வேளையில், டிஏபியின் கொள்கைகள் மற்றும் உணர்வுகளை அனைத்து வேட்பாளர்களுக்கும் வழிகாட்டியாக கொண்டு தொடர்வார்கள் என்று நாங்கள் நம்புகிறோம்,” என்று அவர் கூறினார்.

டிஏபி கட்சியை தவிர, அமனா கட்சியும் சபா தேர்தலில் வாரிசன் சின்னத்தின் கீழ் போட்டியிடும். இருப்பினும், பி.கே.ஆர், வாரிசனுடன் இணைந்திருந்தாலும் அதன் சொந்த சின்னத்தைப் பயன்படுத்தும்.

மூன்று பாக்காத்தான் ஹராப்பான் கட்சிகளைத் தவிர, ஐக்கிய முற்போக்கு கினாபாலு அமைப்பு (உப்கோ) கட்சியும் வாரிசனுடன் இணைந்துள்ளது.

இதற்கிடையில், ஒரு தனி அறிக்கையில், சபா டிஏபி செயல் தலைவர் பிரான்கி பூன் மிங் ஃபங், வாரிசன் சின்னத்தை பயன்படுத்துவது வாரிசன் பிளஸுடன் நட்பையும் ஒற்றுமையையும் வெளிப்படுத்தும் என்றார்.

“டிஏபி அதன் பாரம்பரிய சின்னமான ‘ராக்கெட்’ ஐ கைவிட்டு, அதற்கு பதிலாக வாரிசன் சின்னத்தைப் பயன்படுத்துவதில் எங்களுக்கு கொஞ்சம் வருத்தமாக இருந்தாலும், இது சரியான செயல் என்று கருதுவதாக கூறினார்.

“நகரத்திலும் கிராமப்புறங்களிலும் எங்கள் ஆதரவாளர்களுடன் கலந்தாலோசித்த பின்னர் நாங்கள் ஒரு முடிவை எடுத்துள்ளோம்.

“சகோதரத்துவத்தாலும் மற்றும் சபா மாநிலத் தேர்தல் நாட்டு மக்களுக்கு மிகவும் முக்கியமான ஒன்று என்பதாலும், பொதுவான சின்னத்தைப் பயன்படுத்த வாரிசான் தலைவர் ஷாஃபி அப்டாலின் பரிந்துரைகளைப் பின்பற்ற நாங்கள் கூட்டாக முடிவு செய்தோம்,” என்று அவர் கூறினார். இந்த நடவடிக்கை அனைத்து வாரிசன் பிளஸ் வேட்பாளர்களுக்கும் வெற்றியை அளிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.