சபாவிலிருந்து வரும் பயணிகள் சோதனை, தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்படுவர்

கோவிட்-19 | நாளை தொடங்கி அக்டோபர் 10 வரை, சபாவிலிருந்து வரும் பயணிகள் தங்கள் இலக்கு விமான நிலையங்கள் மற்றும் நுழைவாயில்களுக்கு வந்தவுடன் கோவிட்-19 சோதனைக்கு உட்படுத்தப்படுவர்.

கூடுதலாக, வழக்கமான 14 நாள் காலத்திற்கு பதிலாக சோதனை முடிவுகள் தயாராகும் வரை அவர்கள் வீட்டிலேயே தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்படுவார்கள்.

மாத தொடக்கத்தில் இருந்து புதிய கோவிட்-19 பாதிப்புகள் அதிகரித்துள்ளது. இது சபா மாநிலத்துடனான பயண வரலாற்றுடன் இணைக்கப்பட்டுள்ளதால் இந்த நடவடிக்கை அவசியமானது என்று சுகாதார அமைச்சின் டாக்டர் நூர் ஹிஷாம் அப்துல்லா கூறினார்.

செப்டம்பர் 20 முதல் செப்டம்பர் 25 வரை, சபாவிலிருந்து திரும்பும் பயணிகள் சம்பந்தப்பட்ட 10 பாதிப்புகள் பதுவாகியுள்ளன என்று அவர் கூறினார்.

இன்று, தீபகற்ப மலேசியாவில் மேலும் 11 புதிய பாதிப்புகள் சபா மாநிலத்திலிருந்து திரும்பும் பயணிகள் மூலம் கண்டறியப்பட்டுள்ளன.

“சபாவில் கோவிட்-19 பாதிப்புகள் மற்றும் திரளைகளின் அதிகரிப்பு இன்னும் நடந்து கொண்டிருக்கிறது, கடந்த 14 நாட்களில் 40க்கும் மேற்பட்ட பாதிப்புகளை பதிவு செய்த பின்னர் நான்கு மாவட்டங்கள் சிவப்பு மண்டலங்களாக அடையாளம் காணப்பட்டுள்ளன.

“நிலைமையை கருத்தில் கொண்டு, இந்த நபர்களிடமிருந்து பரவும் அபாயத்தை கண்காணிக்க சபாவில் பயண வரலாறு உள்ள நபர்கள் மீது கோவிட்-19 தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை செயல்படுத்த வேண்டிய அவசியம் உள்ளது” என்று நூர் ஹிஷாம் இன்று ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.