அக்டோபர் 3 நள்ளிரவு முதல் சபாவில் மாவட்டங்களுக்கு இடையேயான பயண தடை

கோவிட் -19 |  சனிக்கிழமை நள்ளிரவு முதல் சபாவில் மாவட்டங்களுக்கு இடையேயான பயணம் அனுமதிக்கப்படாது என்று பாதுகாப்பு அமைச்சர் இஸ்மாயில் சப்ரி யாகோப் இன்று அறிவித்தார்.

அக்டோபர் 3 ஆம் தேதி அதிகாலை 12.01 முதல் அக்டோபர் 16 வரை சபா முழுவதும் மாவட்ட இயக்கக் கட்டுப்பாட்டை விதிக்க அரசாங்கம் முடிவு செய்துள்ளது.

“இருப்பினும், உணவு வழங்கல், மருத்துவம், பாதுகாப்பு மற்றும் பிற அத்தியாவசிய சேவைகளுக்கு பணியாளர்கள் மாவட்டங்களுக்கு இடையேயான பயணங்களை மேற்கொள்ள அனுமதிக்கப்படுவார்கள்” என்று இஸ்மாயில் கூறினார்.

இந்த காலகட்டத்தில், தனிமைப்படுத்தப்பட்ட காலம் முடிவடைந்து வீடு திரும்பும் மக்கள் அந்தந்த மாவட்டங்களுக்கு அல்லது தீபகற்பம், சரவாக் மற்றும் லாபுவானுக்கு திரும்ப அனுமதிக்கப்படுவார்கள் என்றும் அவர் கூறினார்.

தவாவ், லஹட் டத்து, செம்போர்னா மற்றும் குனக் ஆகிய நான்கு மாவட்டங்களில் தற்போது விதிக்கப்பட்டுள்ள இயக்கக் கட்டுப்பாட்டு ஆணை மேலும் நீட்டிக்கப்படும் என அவர் தெரிவித்தார்.
நேற்று நண்பகல் வரையிலான நிலவரப்படி, மாநிலத்தில் மொத்தம் 888 வழக்குகள் பதிவாகியுள்ளன. இது அனைத்து மாநிலங்களுக்கிடையில் மிக அதிகமான எண்ணிக்கையாகும்.
தீபகற்ப மலேசியாவில் புதியதாக தொற்று கண்ட மக்கள் சபாவிற்கு பயணம் மேற்கொண்டவர்களாக இருக்கிறார்கள் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

உறுதியான செய்திகளுக்கு சுகாதார அமைச்சின் தகவலை அணுகவும்.

“ஒரு பகுதியில் புதியதாக கோவிட் -19  தொற்று கண்டவர்கள் இருக்கிறார்களா  என்பதை சுகாதார அமைச்சினால் மட்டுமே தீர்மானிக்க முடியும் என்பதை நான் வலியுறுத்த விரும்புகிறேன்.”

“மேலும், கோவிட் -19 தொற்று கண்ட நோயாளிகளுடன் நெருங்கிய தொடர்பு கொண்ட அல்லது அறிகுறிகளைக் கொண்ட நபர்களை 14 நாள் தனிமைப்படுத்த உத்தரவு கடிதங்களும் சுகாதார அமைச்சகம் மட்டுமே  வழங்க முடியும்,” என்று அவர் கூறினார்.

தவறான தகவல்களை பரப்புபவர்களுக்கும், கோவிட் -19 நோயாளிகளின் பெயரை வெளிப்படுத்துபவர்களுக்கும் எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க முடியும் என்று அமைச்சர் பொதுமக்களை எச்சரித்தார்.