பிகேஆராலும் டிஏபி-யாலும் ஹூடுட்டைத் தடுக்க முடியாது, மசீச

கிளந்தானில் ஹூடுட் சட்டம் அமல்படுத்தப்பட்டிருப்பதற்கு எதிராக பாஸின் தோழமைக் கட்சிகளான பிகேஆரும் டிஏபியும் எதுவும் சொல்ல முடியுமா என்பது சந்தேகமே என்கிறார் கிளந்தான் மசீச செயலாளர் டான் கென் டென்.

இன்று ஓர் அறிக்கையில் இதனைத் தெரிவித்த டான், கிளந்தானில் ஒரு காப்பிக்கடை பணிப்பெண் கைகள் தெரிய உடை அணிந்திருந்ததற்காக கடை உரிமையாளருக்கு அபராதம் விதிக்கப்பட்டதாகக் கூறினார்.

“ஹூடுட் சட்டம் போன்ற ஒன்று கிளந்தானில் நடைமுறையில் உள்ளது. ஆனால், அதைப் பற்றி பிகேஆரோ டிஏபி-யோ முஸ்லிம்-அல்லாதாருக்கு எந்தவொரு விளக்கத்தையும் இதுவரை அளித்ததில்லை.

“இது, பாஸின் மேலாண்மையை அவற்றால் தடுக்க முடியவில்லை என்பதைத்தான் காண்பிக்கிறது.”

செளகரியத்துக்காக உருவாக்கிக்கொள்ளப்பட்ட கூட்டணியைக் கட்டிக்காக்க வேண்டும் என்பதற்காக இதுபோன்ற விவகாரங்களை அவை கண்டும் காணாமல் இருந்து விடுகின்றன என்றாரவர்.

கிளந்தான் பாஸ் அரசு, இஸ்லாமிய சட்டங்கள் முஸ்லிம்-அல்லாதாரிடம் நடைமுறைப்படுத்தப்படாது  என்று உறுதி கூறியிருந்தது. ஆனால், காப்பிக்கடை உரிமையாளருக்கு விதிக்கப்பட்ட அபராதம் அது உண்மை அல்ல என்பதை அல்லவா காட்டுகிறது என்றவர் கூறினார்.

திங்கள்கிழமை கோத்தா பாரு முனிசிபல் மன்றம் நடத்திய ஒரு சோதனையில் காப்பிக்கடையில் பணிசெய்யும் முஸ்லிம் பெண் ஒருவர், அரைக்கை டி-சட்டை அணிந்திருக்கக் காணப்பட்டதால் அந்தக் கடையின் உரிமையாளருக்கு ரிம250 அபராதம் விதிக்கப்பட்டது.இது சீன நாளேடுகளில் ஒரு முக்கிய செய்தியாக பரவலாக வெளியிடப்பட்டது.

கிளந்தானில் ஊராட்சி மன்றங்களின் விதிகளின்படி முஸ்லிம் பெண்கள் கடைகளில் வேலை செய்பவர்களாக இருந்தால்கூட உடல் முழுவதையும் மறைக்கும் உடை அணிய வேண்டும்.

இது பொருத்தமற்ற ஒரு விதி என்று கூறிய டான், உணவகங்களில் சமையல் கூடத்தில் வேலை செய்பவர்கள் சட்டைக்கைகளைச் சுருட்டி விட்டுக்கொண்டுதான் வேலை செய்ய வேண்டியிருக்கும் என்றார்.

“அமலாக்க அதிகாரிகள் நிலைமைக்குத் தக்கபடி நடந்துகொள்ள வேண்டும்.வெறுமனே சம்மன்களை வழங்கிச் செல்லக்கூடாது.”

ஹூடுட் சட்டம் முஸ்லிம்-அல்லாதாருக்கு இல்லை என்று பக்காத்தான் கூறியதெல்லாம் “வாக்குகளைப் பெறுவதற்காக வழங்கப்பட்ட வெற்று வாக்குறுதிதான்”, என்றாரவர்.

“முன்பு பக்காத்தான் ரக்யாட் ஹூடுட்டை அமல்படுத்தும் சாத்தியம் இல்லை என்றது.இப்போது நடந்துள்ளதற்கு பிகேஆரும் பாஸும் எப்படிப்பட்ட விளக்கம் தரப்போகின்றன?”, என்று டான் வினவினார்.

TAGS: