கோவிட் 19 மூன்றாம் அலை : கிள்ளான் பள்ளத்தாக்கில் பிள்ளைகளைப் பள்ளிக்கு அனுப்ப பெற்றோர் தயக்கம்

கிள்ளான் பள்ளத்தாக்கில், கோவிட் 19 தொற்றுக்கிருமியின் தாக்கம் அதிகரித்து வருவதன் காரணமாகப் பெற்றோர் தங்கள் பிள்ளைகளைப் பள்ளிக்கு அனுப்ப தயக்கம் காட்டுகின்றனர்.

மலேசியாகினி சில பெற்றோரை அனுகியபோது, தங்கள் பிள்ளைகளின் வகுப்பில் மாணவர்களின் வருகை பாதியாகக் குறைந்துள்ளதாக அவர்கள் தெரிவித்தனர்.

இருப்பினும், சில பள்ளிகள் இன்னும் இயங்கலை வகுப்புகளைத் தொடங்காத நிலையில், பெற்றோர்களே பிள்ளைகளின் பாடங்களைக் கவனித்துகொள்ல வேண்டியுள்ளது, வேலைக்கு செல்பவர்களாக இருந்தபோதிலும்.

கடந்த 3 வாரங்களில், சபா தேர்தல் களத்தின் பின்னணியின் காரணமாக, கோலாலம்பூர், சிலாங்கூர் மற்றும் புத்ராஜெயாவில் 10 பள்ளிகள் இந்த கோவிட்-19 பெருந்தொற்றால் பாதிப்புக்குள்ளாகியுள்ளன.

இதனால், பல பெற்றோர் தங்கள் பிள்ளைகளைப் பள்ளிக்கு அனுப்ப தயக்கம் காட்டி வருவதாகத் தெரிகிறது. ஒருசில பெற்றோர், பள்ளியில் சமூக இடைவெளி முறையாகக் கடைப்பிடிக்கப்படுவதில்லை என்ற காரணத்தால் பிள்ளைகளை அனுப்பத் தயக்கம் காட்டுகின்றனர்.

கடந்த வாரம் திங்கள் அன்று 77 விழுக்காடாக இருந்த மாணவர் வருகை, வெள்ளிக்கிழமை 38 விழுக்காடாக சரிவு கண்டது. பிள்ளைகளைப் பள்ளிக்கு அனுப்பாமைக்குப் பெற்றோர் கொடுக்கும் காரணம் கோவிட் -19 பெருந்தொற்று.