கோவிட் 19 | இன்று மதியம் வரையில் 561 நேர்வுகள் பதிவாகியுள்ளதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.
கோவிட் 19 பெருந்தொற்று தொடங்கியதிலிருந்து இரண்டாவது அதிகபட்ச எண்ணிக்கை இது. 6 நாட்களுக்கு முன்னர், அக்டோபர் 6-ம் தேதி நாட்டில் அதிகபட்ச நேர்வுகள், அதாவது 691 நேர்வுகள் பதிவாகியது குறிப்பிடத்தக்கது. 553 உள்ளூர் நேர்வுகளாகும், அவற்றில் 494 குடிமக்கள் சம்பந்தப்பட்டவை.
“இதில் 11 பேர் சபா சென்றுவந்தவர்கள்,” என சுகாதாரத் தலைமை இயக்குநர் டாக்டர் நூர் ஹிஷாம் அப்துல்லா இன்றையப் பத்திரிக்கையாளர்கள் சந்திப்பின் போது தெரிவித்தார்.
இதற்கிடையே, 133 நோயாளிகள் இன்று குணமடைந்துள்ளனர். ஆக, நாட்டில் பதிவாகிய 15,657 நேர்வுகளில் 10,913 பேர் குணமடைந்துள்ளனர்.
இன்று, மேலும் 2 மரணங்கள் சம்பவித்துள்ள நிலையில், இதுவரை இத்தொற்றுநோய்க்கு நாட்டில் 157 பலியாகியுள்ளனர். 67 வயதான ஒருவர் சண்டக்கானிலும், 63 வயது நிரம்பிய ஒருவர் தாவாவ் மருத்துவமனையிலும் இன்று இறந்துள்ளனர்.
மாநிலம் வாரியாக, சபாவில் 488, சிலாங்கூரில் 25, கெடாவில் 16, கோலாலம்பூரில் 8, லாபுவானில் 5 ஜொகூர், மலாக்கா, திரெங்கானுவில் 3, பேராக் பினாங்கில் 1 என இன்று பதிவாகியுள்ளது.