மாமன்னர் சுல்தான் அப்துல்லா – அன்வர் இப்ராஹிம் இடையிலான சந்திப்பு, இருந்துவந்த கேள்விகளுக்கானப் பதில்களைக் கொடுக்காமல், இன்னும் அதிகமான கேள்விகளையே உருவாக்கியுள்ளது. முன்னதாக செப்டம்பர் 23-ம் தேதியன்று, பத்திரிகையாளர்களை அழைத்து, ஓர் அதிர்ச்சி அறிவிப்பை அன்வர் செய்தார் – பிரதமர் முகிடின் யாசினின் அரசாங்கத்தைக் கவிழ்க்கத் தேவையான நாடாளுமன்றப் பெரும்பான்மை தன்னிடம் உள்ளதாகக் கூறினார்.
நேற்று (அக். 13), மிகவும் எதிர்பார்க்கப்பட்ட, ஆட்சியாளருடனான சந்திப்பிற்குப் பிறகு, அன்வர் மற்றொரு பத்திரிக்கையாளர் சந்திப்புக்கு அழைப்பு விடுத்தார். 120-க்கும் மேற்பட்ட எம்.பி.-க்களின் ஆதரவு தனக்கு இருப்பதை நிரூபிக்கும் வகையில், சட்டப்பூர்வமான ஆவணங்கள் மற்றும் கட்சித் தலைவர்களின் ஒப்புதல்களை மன்னரிடம் வழங்கியுள்ளதாக அன்வார் அறிவித்தார்.
இருப்பினும், அரண்மனையின் கூற்றுப்படி, அன்வர், தனக்கு ஆதரவளிப்பதாகக் கூறிய நாடாளுமன்ற உறுப்பினர்களின் “முழுப் பெயர் பட்டியலை” வழங்கவில்லை, எம்.பி.-க்களின் மொத்த எண்ணிக்கையை மட்டுமே முன்வைத்தார். எனவே, கூட்டரசு அரசியலமைப்புச் சட்டத்தில் பரிந்துரைக்கப்பட்ட “சட்ட செயல்முறையை மதியுங்கள்” என அன்வாரை மன்னர் அறிவுறுத்தியதாகக் கூறப்பட்டது.
அரண்மனை அதிகாரி அஹ்மத் ஃபடில் ஷம்சுதீனின் அந்த அறிக்கை, முகிடினை ஆட்சி அதிகாரத்திலிருந்து வெளியேற்ற முடியும் என்ற நம்பிக்கைகளை அழித்தது. புறக்கதவு பிரதமரின் ஆதரவாளர்கள், உடனடியாக அன்வாரிடம் போதிய எண்ணிக்கையிலான ஆதரவு இல்லை என்றும், மீண்டும் அவர் பொய் சொல்கிறார் என்றும் முடிவு செய்தனர். ஆனால், அன்வர் சொல்வது பொய்யா?
அன்வர் தனக்கு ஆதரவளிப்பதாகக் கூறும் எம்.பி.-களின் பெயர்களை வெளியிடவில்லை அல்லது மறுத்துவிட்டார் என்பதால், அவர் மன்னரிடம் பொய் சொன்னார் என்று அர்த்தமல்ல. ஓர் அரசாங்கத்தை உருவாக்க, தன்னிடம் “வலிமைமிக்க” 133 பெரும்பான்மை – பக்காத்தான் ஹராப்பான் 91 & பாரிசான் நேஷனல் 42 – இருப்பதாக மன்னரிடம் கூறியதால், அன்வர் பொய் சொல்கிறார் என்று பொருள்படுமா?
அல்லது எடுத்துகாட்டாக, பி.கே.ஆரில் 38, டிஏபியில் 42, அமானாவில் 11, வாரிசானில் 9, அம்னோவில் 23, மஇகா-வில் ஒருவர் மற்றும் பாஸ் கட்சியில் இருவர் என, மொத்தம் 133 எம்.பி.-களின் பெயர்களை வெளியிடாமல் – அவர்கள் தனக்கு விசுவாசமானவர்கள் என்று அன்வர் கூறினால், அது பொய்யா? அப்படி அவர் பொய் சொல்லியிருந்தால், அரண்மனையிலிருந்து வெளியேற்றப்பட்டிருக்க மாட்டாரா?
அதற்குப் பதிலாக, அன்வர் பத்திரிகையாளர்களை அழைத்து, தனக்கு 120-க்கும் மேற்பட்ட எம்.பி.-களின் ஆதரவு உள்ளது என மீண்டும் கூறுகிறார் என்றால், ஒன்று அவருக்குப் பிரதமராக வேண்டும் எனும் வெறிபிடித்திருக்க வேண்டும் அல்லது அவர் ஒரு பொய்யர் அல்லது உண்மையிலேயே அவரிடம் 120-க்கும் மேற்பட்ட எம்.பி.க்களின் ஆதரவு உண்டு.
பெரிக்காத்தான் நேஷனல் அரசாங்கத்திடமிருந்து ஊதியம் வாங்கும் அரண்மனை அதிகாரி மின்னல் வேகத்தில் செயல்பட்டது ஆச்சரியமில்லை – அன்வார் அவரை ஆதரித்த எம்.பி.-க்களின் பெயர் பட்டியலைக் கொண்டிருக்கவில்லை, என ஒரு கொலையை விட மோசமான குற்றம் போல அவர் அறிவிப்பு செய்தார்.
இதில், சுவாரஸ்யம் என்னவென்றால், மாமன்னர் அடுத்து என்ன செய்யவுள்ளார் என்று அந்த அதிகாரி குறிப்பிடவில்லை. உண்மையில், அன்வார் மன்னரின் விலைமதிப்பற்ற நேரத்தை வீணடித்திருந்தால், அன்வரின் கூற்று அபத்தமானது, முட்டாள்தனமானது என்று அரண்மனை கூறியிருக்காதா?
ஆயினும், எல்லாவற்றையும் முன்கூட்டியே ஏற்பாடு செய்ததைப் போல, அன்றைய காலவரையறையின் அட்டவணையில், அன்வர் அரண்மனையை விட்டு காலை 11:30 மணிக்கு வெளியேறியதும், மாமன்னர், 83 வயதான தெங்கு ரஸாலீ ஹம்சாவை, மதியம் 2 மணிக்கு சந்தித்தார். இது எப்படி உடனடியாக சாத்தியமானது?
நஜிப்பும் ஜாஹிட் ஹமிடியும் அதிகாரப் பசியுள்ள முகிடீனைத் தவறாக வழிநடத்தவும் திசைதிருப்பவும் முயற்சிக்கின்றனர். சில எம்.பி.-க்களின் ஆதரவை முகிடினிடமிருந்து அன்வருக்கு மாற்றிவிட தெங்கு ரஸாலி பல மாதங்களாக முயற்சித்து வருகிறார்.
இந்நிலையில், நாட்டைத் தொடர்ந்து வழிநடத்த முகிடினால் முடியும் எனும் நம்பிக்கை எம்.பி.-க்களுக்கு இருக்கிறதா என்பதை உறுதி செய்ய, டிஏபி பொதுச்செயலாளர் லிம் குவான் எங் உட்பட கட்சி தலைவர்களைச் சந்திக்க மாமன்னர் அழைப்புவிடுத்துள்ளார். இது ஓர் ஆரம்பம் என்று தெரிகிறது.
நிலைமையை இன்னும் மோசமாக்கும் வகையில், அம்னோ தற்செயலாக ஒரு கூட்டத்தை நடத்தி, 2 இருக்கைகள் பெரும்பான்மை கொண்ட முகிடின் அரசாங்கத்திற்கான ஆதரவைத் திரும்பப் பெறுவது குறித்து பரிசீலிக்க முடிவு செய்துள்ளது.
நாட்டின் வரலாற்றில் மிகக் குறுகிய காலம் பணியாற்றியப் பிரதமராக முகிடின் ஆகவுள்ளார் என்பதற்கான மற்றொரு அறிகுறி, திடீரென அவர் பத்திரிகையாளர் சந்திப்பை நடத்தி, தன்னைப் புகழ்ந்து கொண்டதுதான் – அன்வார் மாமன்னரைச் சந்தித்தபோது, தான் கோவிட் -19 தொடர்பான விஷயங்களைப் பற்றி விவாதிப்பதில் மும்முரமாக இருந்ததாக அவர் கூறிகொண்டார். கோவிட் -19 தொற்றுநோயை நிர்வகிப்பதிலும், பொருளாதாரத்தை மேம்படுத்துவதிலும் அவரது முழு கவனமும் உள்ளது என்றார்.
தற்போதைய அரசாங்கத்தைக் கவிழ்க்க அன்வர் மேற்கொள்ளும் முயற்சியைக் கண்டு பேரரசரும் முகிடினும் கேலி செய்யாமல், மாமன்னர் கட்சி தலைவர்களைச் சந்திக்க வேண்டியதன் அவசியம் என்ன? மறுபுறம், முகிடின் தன்னைப் பற்றி விளக்கமளிக்கவும் புகழவும் ஒரு பத்திரிகையாளர் சந்திப்பு எதற்காக?
பி.கே.ஆர். தலைவர் “சட்டத்தின் செயல்முறையை மதிக்க வேண்டும்” என்று அரண்மனை ஏன் கூறியது? அனைத்து ஆவணங்களையும் பார்க்கவும், மன்னர் ஒரு முடிவை எடுக்கவும் கட்சித் தலைவர்களைச் சந்திக்கவும் போதுமான நேர அவகாசம் அளிக்கப்பட வேண்டும் என்ற அன்வரின் கருத்துடன் அந்த அறிக்கையை ஒன்றாகப் படிக்க வேண்டும்.
கட்சித் தலைவர்களை நேர்காணல் செய்த பின்னர், முகிடின் நிர்வாகம் பெரும்பான்மை ஆதரவை இழந்துவிட்டதாக மன்னர் அறிந்தால், மன்னர் பிரதமரை அரண்மனைக்கு வரவழைக்கலாம். பிரதமர் பதவியை இராஜினாமா செய்து, பொதுத் தேர்தலுக்காக நாடாளுமன்றத்தைக் கலைக்குமாறு மன்னருக்குப் பிரதமர் அறிவுறுத்தலாம். அகோங் தேர்தலை நடத்த உடன்படவில்லை என்றால், ஒரு புதிய பிரதமரை நியமிக்கலாம்.
அரண்மனையின் அறிக்கை, பிரதமர் முகிடினை மாமன்னரால் கூட பதவி நீக்கம் செய்ய முடியாது என்பதையும் குறிக்கலாம். எனவே, முகிடின் நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை ஆதரவை இழந்துவிட்டார் என்பதை உறுதிப்படுத்த, நம்பிக்கையில்லாத் தீர்மானம் பயன்படுத்தப்பட வேண்டும் என்று மன்னர் பரிந்துரைத்திருக்கலாம். அதனால்தான், அன்வர் தன்னை ஆதரிப்பதாகக் கூறிய எம்.பி.-க்களின் பெயரை வெளியிடாமல் இருந்திருக்கலாம்.
எப்படியாயினும், முகிடின் சிக்கிக்கொண்டார். தன்னால் தேர்ந்தெடுக்கப்பட்ட நாடாளுமன்ற சபாநாயகர் அசார் அஸீஸான் ஹருணிடம், நம்பிக்கையற்ற தீர்மானத்தைக் கொண்டுவர மன்னர் கோரியிருந்தால், அதனை முன்மொழிய வேண்டாம் என்று அறிவுறுத்த முகிடினால் முடியாது. தற்போது அரசாங்கத்தில் 3 எம்.பி.-க்கள் பிரதமருக்கு எதிராக வாக்களித்தாலும் முகிடினின் ஆட்சி கவிழும். ஆக, அன்வர் நாடாளுமன்றத்தில் எதையும் நிரூபிக்க தேவையில்லை. அதனால்தான், அன்வார் அகோங்கைச் சந்திப்பதைத் தடுக்க காவல்துறைக்கு அறிவுறுத்தப்பட்டபோதும், அது தோல்வியுற்றது.