அன்வார் மீது போலிஸ் புகார், பி.கே.ஆர். மகளிர் கண்டனம்

கடந்த செவ்வாயன்று, மன்னருடனான சந்திப்பின் போது, தனக்கு ஆதரவளித்த எம்.பி.-க்களின் பட்டியலை முன்வைக்காததற்காக பி.கே.ஆர். தலைவர் அன்வார் இப்ராஹிமுக்கு எதிராகப் போலிஸ் புகார் செய்ததற்காக பெர்சத்து இளைஞர் தலைவர்களுக்குத் திரெங்கானு பி.கே.ஆர். இளைஞர் மகளிர் தலைவர் யூஸ்லைனி அஸ்மி கண்டனம் தெரிவித்துள்ளார்.

“சில பெர்சத்து இளைஞர் உறுப்பினர்கள், அன்வார் மீது போலிஸ் புகார் அளித்த நடவடிக்கையை நான் மிகவும் வேடிக்கையாகக் காண்கிறேன்.

“செப்டம்பர் 23-தேதி, அன்வார் தனக்கு பெரும்பான்மை இருப்பதாக அறிவித்த போதும் –  தனது ஆதரவாளர்களின் பெயரை இதுவரை வெளியிடாத போதிலும் – சில எம்.பி.-க்கள் அன்வாரின் ஆதரவாளர்கள் பட்டியலில் தங்கள் பெயரும் இணைக்கப்பட்டிருப்பதாகக் கூறி போலீஸ் புகார் செய்தனர்,

“இப்போது பெர்சத்து இளைஞர்கள், அன்வார் மாமன்னரை அவமதித்தார் எனக் கூறி ஒரு புகாரைப் பதிவு செய்துள்ளார். ‘ஷெராடன் இயக்கம்’ நடந்தபோது, அவரை ஆதரித்த எம்.பி.-க்களின் பட்டியலை முஹைதீன் யாசின் வெளியிட்டாரா?” என யூஸ்லைனி இன்று வெளியிட்ட ஓர் அறிக்கையில் கேள்வி எழுப்பியுள்ளார்.

நேற்று, பெர்சத்து தகவல் பிரிவு தலைவர் மொஹமட் அஷ்ரப் முஸ்தாக்கிம், அன்வாரின் நடவடிக்கையானது அரச நிறுவனத்திற்கு எதிரான அவமானம் என்று கூறினார்.

“புதிய அரசாங்கத்தை அமைக்க தனக்கு பெரும்பான்மை இருக்கிறது என்ற பி.கே.ஆர். தலைவரின் கூற்று பொய்யாகும். அவரை ஆதரிக்கும் எம்.பி.-க்களின் பெயர்களை வெளியிடுவேன் என்று கூறினார், ஆனால் அவர் அவ்வாறு செய்யவில்லை,” என்று அஷ்ரப் கூறினார்.

தற்போதைய அரசியல் சூழலில், அவர் பெரிக்காத்தான் நேஷனல் கூட்டணியைப் பற்றி கவலைப்பட வேண்டியதுதான் சிறந்தது என்று யூஸ்லானி சொன்னார்.

“தற்போதைய அரசாங்கத்துக்கான அம்னோவின் ஆதரவு இழுபறியாக உள்ள நிலையில்,  முகிடின் தலைமையை ஆதரிக்க எத்தனை எம்.பி.-க்கள் இருக்கிறார்கள் என்று பெர்சத்து இளைஞர்களிடம் நான் கேட்க விரும்புகிறேன்.

“அவர்களின் பெயர் பட்டியலையும் நாங்கள் தெரிந்துகொள்ள விரும்புகிறோம், காரணம், அம்னோ இல்லையென்றால், தற்போதைய பிரதமருக்கு நாடாளுமன்றப் பெரும்பான்மை இல்லை,” என்று அவர் மேலும் சொன்னார்.