ரோஸ்மாவின் ஊழல் வழக்கு நவம்பர் 2-ஆம் தேதி தொடரும்

சரவாக் உட்புறத்தில் உள்ள 369 பள்ளிகளில் கலப்பின சூரியச் சக்தியை வழங்குவதற்கும் நிறுவுவதற்கும் தெண்டர் வழங்கியது தொடர்பான ரோஸ்மா மன்சோரின் ஊழல் வழக்கு விசாரணை, கோலாலம்பூர் உயர்நீதிமன்றத்தில், நவம்பர் 2-ஆம் தேதி மீண்டும் தொடங்கும்.

சிலாங்கூர், புத்ராஜெயா மற்றும் கோலாலம்பூரில் நிபந்தனைக்குட்பட்ட நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணையின் (பி.கே.பி.பி) காரணமாக, அக்டோபர் 20-ஆம் தேதி நிர்ணயிக்கப்பட்ட வழக்கு விசாரணையின் தேதியை ஒத்திவைப்பதாக அரசு தரப்பின் துணை வழக்குரைஞர் அஹ்மத் அக்ரம் கரிப் தெரிவித்தார்.

“நாங்கள் (அரசு தரப்பு) நேற்று நீதிமன்றத்திலிருந்து மின்னஞ்சல் வழியாக அந்த அறிவிப்பைப் பெற்றோம்,” என்று அவர் இன்று புலனம் வழி பெர்னாமாவிடம் தெரிவித்தார்.

விசாரணை மீண்டும் தொடங்கும் போது, வழக்கு விசாரணையில் ஐந்தாவது சாட்சியாக இருக்கும் முன்னாள் கல்வி அமைச்சர் மஹ்ட்ஷீர் காலிட், ​​மீண்டும் குறுக்கு விசாரணைக்கு அழைக்கப்படுவார்.

அதே தேதியில், ரோஸ்மாவிற்கும் அவரது கணவர், முன்னாள் பிரதமர் நஜிப் ரசாக்கிற்கும் இடையிலான உரையாடலைக் கொண்டதாகக் கூறப்படும் ஆடியோ பதிவை நீதிமன்றத்தில் சாட்சியமாக சேர்க்கும் விண்ணப்பமும் நீதிமன்ற வழக்கு விசாரணைக்கு வரும்.