டிஏபி : அம்னோவுடன் இணைந்து மாநில அரசு, ஜொகூர் பி.எச். ஒருபோதும் அதுபற்றி விவாதித்ததில்லை

ஜொகூர் பக்காத்தான் ஹராப்பன் (பி.எச்.), ஜொகூர் அம்னோவுடன் இணைந்து மாநில அரசை அமைப்பது குறித்து ஒருபோதும் விவாதித்தது இல்லை என்று ஜொகூர் டிஏபி கூறியுள்ளது.

தேசியக் கூட்டணியில் (பிஎன்) இருந்து அம்னோ விலகினால், அதனுடன் இணைந்து மாநில அரசை உருவாக்க பி.எச். தயாராக உள்ளது என்ற ஜொகூர் பி.எச். தலைவர் அமினோல்ஹுடா ஹாசனின் அறிக்கை தொடர்பில், ஜொகூர் டிஏபி நேற்றிரவு வெளியிட்ட ஓர் அறிக்கையில் இவ்வாறு தெரிவித்தது.

“ஜொகூரில், பி.எச். – அம்னோ ஒத்துழைப்பு அழைப்பு தொடர்பான அறிக்கையால், மாநிலப் பக்காத்தான் ஹராப்பானின் அங்கத்துவக் கட்சிகளில் ஒன்றான டிஏபி ஆச்சரியமடைந்துள்ளது.

“இவ்விவகாரம் ஜொகூர் பி.எச். தலைமை கூட்டத்தில் இதுவரை விவாதிக்கப்படவில்லை,” என்று அவ்வறிக்கையில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

“எங்கள் கருத்துப்படி, மக்களின் ஆணையை மீட்டெடுப்பதற்கும் அரசாங்கத்தை அமைப்பதற்குமான எந்தவொரு முயற்சியும் ஜொகூர் பி.எச். தலைமைத்துவ மன்றத்தின் கவனத்திற்குக் கொண்டுசென்று, அதன் ஒப்புதலைப் பெற்றிருக்க வேண்டும்,” என்று அதில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

மாநில அரசை அமைக்க, அம்னோவுடன் உறவுகளை ஏற்படுத்த ஜொகூர் பி.எச். தயாராக இருப்பதாக, நேற்று அமினோல்ஹுடா கூறியதாக தெரிவிக்கப்பட்டது.

“சட்டமன்ற உறுப்பினர்களைக், குறிப்பாக, 14-வது பொதுத் தேர்தலின் போது பி.எச்.-உடன் இருந்தவர்கள் அல்லது மற்ற எந்த அம்னோ சட்டமன்ற உறுப்பினர்களுடனும் கைக்கோர்த்து, ஆட்சியைக் கைப்பற்ற ஜொகூர் பி.எச். தயாராக இருக்கிறது,” என்று அவர் கூறியதாக ‘பெரித்தா ஹரியான்’ நாளிதழ் செய்தி வெளியிட்டிருந்தது.