பிரதமர் முகிடின் யாசினைக் கவிழ்க்கும் முயற்சியில், முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதிர் முகமதுவின் முகாமினர் நம்பிக்கையில்லாத் தீர்மானத்தைத் தாக்கல் செய்துள்ளனர்.
முகிடின் கூட்டணிக்கான ஆதரவைத் திரும்பப் பெறப்போவதாக அம்னோ மிரட்டி வருவதால், தேசியக் கூட்டணி அரசாங்கம் ஆட்டம் கண்டிருக்கும் வேளையில், இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
மகாதீருக்குப் பக்கபலமாக இருக்கும் குபாங் பாசு நாடாளுமன்ற உறுப்பினர் அமிருதீன் ஹம்சா, நேற்று நம்பிக்கையில்லாத் தீர்மானத்தைத் தாக்கல் செய்ததாகத் தெரிவித்தார்.
“2020, அக்டோபர் 15 தேதியிடப்பட்ட, பிரதமருக்கு எதிரான அவநம்பிக்கை பிரேரணை கடிதத்தை, அடுத்த நாடாளுமன்றக் கூட்டத்தொடருக்காக, நான் சபா சபாநாயகருக்கு அனுப்பியுள்ளேன்.
“இந்த முயற்சி 14-வது பொதுத் தேர்தலுக்கான மக்களின் ஆணையை மீட்டெடுப்பதற்கானது. மேலும், திறமையற்ற, நிலையற்ற அரசாங்கத்தை நிலைநிறுத்துவதற்கான ஒரு முயற்சி,” என்று அவர் ஓர் அறிக்கையில் தெரிவித்தார்.
மக்களவை அமர்வு நவம்பர் 2-ஆம் தேதி தொடங்கும்.
முகிடினுக்கு எதிரான நம்பிக்கையில்லாத் தீர்மானத்தை மக்களவையில் சமர்ப்பிக்க, கடந்த இரண்டு அமர்வுகளில் மகாதீர் முயன்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
இருப்பினும், அரசாங்க முன்மொழிவுகள் மற்றும் மசோதாக்களுக்கு மட்டுமே முன்னுரிமை அளிக்கும் நாடாளுமன்ற நடைமுறையின் காரணமாக, எதிர்க்கட்சியின் அந்த மசோதா வாக்களிப்புக்குத் தாக்கல் செய்யப்படாமல் போனது.
இந்த நவம்பர் மாத மக்களவைக் கூட்டத் தொடரில் தாக்கல் செய்யப்படவுள்ள 2021 வரவுசெலவுத் திட்டம் முகிடினுக்கான ஆதரவையும் தீர்மானிக்கும்.
தற்போது, மொத்தம் 222 எம்.பி.-க்களில் 113 எம்.பி.க்களின் ஆதரவை முகிடீன் பெற்றுள்ளார். நாடாளுமன்ற உறுப்பினர்கள் மூன்று பேர் கட்சியைத் தாவினாலும், அவரது அரசாங்கம் வீழ்ச்சியடையும்.