மாமன்னர் : நிலைத்தன்மையற்ற அரசியல் அரங்கிற்கு நாட்டை இழுத்துச் செல்லாதீர்கள், சிந்தியுங்கள்!

மாட்சிமை தங்கியப் பேரரசர், அல் சுல்தான் அப்துல்லா ரியாதுதீன் அல்-முஸ்தபா பில்லா ஷா, நாடு நிலைத்தன்மையற்றதோர் அரசியல் அரங்கிற்கு இழுத்துச் செல்லப்படாமல் இருப்பதை உறுதிசெய்ய, அனைத்து மக்களையும், குறிப்பாக அரசியல்வாதிகளைச் சிந்தித்து செயல்படுமாறு உத்தரவிட்டுள்ளார்.

குறிப்பாக, கோவிட் -19 தொற்றுநோயின் காரணமாக, மக்கள் பல்வேறு பிரச்சினைகளைச் சமாளித்துவரும் இந்நேரத்தில்.

‘முதிர்ச்சியடைந்த அரசியலை வெளிப்படுத்துங்கள்’ என்று, கடந்த மே மாதம், 14-வது நாடாளுமன்றக் கூட்டத் தொடரின், மூன்றாவது தவணை தொடக்க விழாவின் போது, நாடாளுமன்ற உறுப்பினர்களுக்குத் தாம் வழங்கிய ஆலோசனையை மாமன்னர் மீண்டும் அறிவுறுத்தியுள்ளதாக, இஸ்தானா நெகாராவின் மேலாளர் அஹ்மத் ஃபாடில் சம்சுதீன் ஓர் ஊடக அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

“மக்களின் குறைகளைப் புரிந்துகொண்டு அவற்றிற்குத் தீர்வு காணுங்கள், மக்களின் நல்வாழ்வைப் புறக்கணிக்காதீர்கள் என்றும் அல் சுல்தான் அப்துல்லா நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு அறிவுறுத்தினார்.

“அரசியல்வாதிகள், அவர்களது கருத்து வேறுபாடுகளை விரோதத்துடன் முடிவுக்கு கொண்டுவரக்கூடாது. மாறாக, கூட்டாட்சி அரசியலமைப்பில் கூறப்பட்டுள்ள ஆலோசனைகள் மற்றும் சட்ட செயல்முறைகள் மூலம் அப்பிரச்சினைகளைத் தீர்க்க வேண்டும் என்று மாமன்னர் வலியுறுத்தியுள்ளார்,” என்று அவர் கூறினார்.