டாக்டர் எம் : அன்வாருக்கு ஆதரவளிப்பது, அம்னோவுக்கு ஆபத்து

பி.கே.ஆர். தலைவர் அன்வர் இப்ராஹிம் பிரதமராகும் முயற்சிக்கு ஆதரவு அளிப்பது, அம்னோ எம்.பி.-க்களுக்கு ஆபத்து என்று தான் நம்புவதாக லங்காவி எம்.பி. டாக்டர் மகாதீர் முஹமட் தெரிவித்துள்ளார்.

இன்று, உத்துசான் மலேசியாவுக்கு அளித்த பேட்டியில், அம்னோ எம்.பி.க்கள் தங்கள் ஆதரவை மாற்றினால், பெரிகாத்தான் நேஷனல் (பி.என்.) அரசாங்கம் வீழ்ச்சியடையும், ஆனால், அதன்வழி அன்வரால் ஒரு புதிய அரசாங்கத்தை உருவாக்க முடியும் என்பதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை என்று மகாதீர் கூறினார்.

“(அது நடந்தால்) பி.என். வீழ்ச்சியடையும், அம்னோவுக்கும் அதே கதிதான். அன்வருக்கும் அம்னோவிற்கும் இடையே ஒரு பிணைப்பு ஏற்பட்டால், சிலர் (அம்னோ எம்.பி.க்கள்) விலகுவர், (அன்வார்) மறுபடியும் பெரும்பான்மை இருக்காது,” என்று அவர் கூறினார்.

ஜூலை நாடாளுமன்ற அமர்வுக்கும் பின்னர், 222 எம்.பி.க்களில் 109 பேர் மட்டுமே முஹைதீன் யாசினுக்கு எதிரானவர்கள் என்பதை அறிய முடிகிறது.

எவ்வாறாயினும், நவம்பர் 2-ஆம் தேதி வரவிருக்கும் மக்களவை அமர்வில் இது மாறக்கூடும், இது அம்னோவுக்குள் உள்ள இடைவெளிகளால் தொடங்கும்.

தற்போது, கட்சியின் அரசியல் பணியகம், முஹைதீனுடன் ஒரு புதிய ஒப்பந்தத்திற்கு அழைப்பு விடுத்து, பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.

கூடுதலாக, அன்வர் ஒரு புதிய அரசாங்கத்தை அமைப்பதற்கான போதிய எண்ணிக்கை தன்னிடம் இருப்பதாகக் கூறியுள்ளார், ஆனால் அதை இன்னும் அவர் நிரூபிக்கவில்லை.

உறுதியாகத் தெரிவது என்னவென்றால், மகாதீரும் அவருக்கு விசுவாசமான நான்கு எம்.பி.க்களும் அன்வரை ஆதரிக்க விரும்பவில்லை.