பிரதமர் முஹைதீன் யாசினுக்கு எதிராகப் பெருகிவரும் சவால்களுக்கு மத்தியில், அம்னோ உச்சமன்ற உறுப்பினர் ஒருவர் தனது கட்சியைச் சேர்ந்த தலைவர்களுக்குத் துணைப் பிரதமர் பதவியையும் முக்கிய அமைச்சரவை பதவிகளையும் வழங்க வேண்டும் என்று கோரியுள்ளார்.
பாசீர் சாலாக் எம்.பி. தாஜூதின் அப்துல் ரஹ்மான், அம்னோ வைத்திருக்கும் நாடாளுமன்ற நாற்காலிகள் எண்ணிக்கை மற்றும் தேசியக் கூட்டணி அரசாங்கத்திற்கு அம்னோவின் பங்களிப்புகள் அடிப்படையில், இந்தக் கோரிக்கைகள் நியாயமானவையாகவே தெரிகின்றது என்று கூறியுள்ளார்.
“நியாயமாகப் பார்த்தால், துணைப் பிரதமர் பதவி அம்னோவுக்கு வழங்கப்பட வேண்டும்.
“பிஎன் அரசாங்கத்தில், அம்னோவின் பங்கு பெரியது, அதற்காக அதிக வெகுமதி மற்றும் அங்கீகாரம் அம்னோவுக்கு வழங்கப்பட வேண்டும், ஆனால் துரதிர்ஷ்டவசமாக அவ்வாறு நடக்கவில்லை,” என்று அவர் கூறினார்.
அம்னோவின் “வலுவான” நிலை, பொருளாதார விவகார அமைச்சர் அஸ்மின் அலியுடன் ஒப்பிடும்போது முரணாக உள்ளது என்று அவர் சுட்டிக்காட்டினார். அஸ்மின் முன்னாள் பி.கே.ஆர். எம்.பி.க்கள் ஒன்பது பேரை மட்டுமே பெர்சத்துவுக்கு அழைத்து வந்தார்.
இந்தப் பிரச்சினை அதிகாரத்திற்காகப் போராடுவது அல்ல என்று வலியுறுத்திய அதே வேளையில், அம்னோவுக்கு அதன் பங்களிப்புகளுக்கு ஏற்ப முக்கியப் பதவிகள் வழங்க வேண்டும் என்றும் தாஜுதீன் கூறினார்.
“இது பதவிகளுக்காகப் போராடுவதைப் பற்றியது அல்ல, ஆனால் மக்களின் கோரிக்கைகளை நிறைவேற்றுவதற்கு, ஒரு கட்சியாக நமக்கு ஒரு தளம் வழங்கப்பட வேண்டும்.
முஹைதீன் விமர்சித்த இன்னொரு அம்னோ தலைவர் முகமட் ரஸ்லான் ரஃபி ஆவார். அம்னோவுடன் ஆலோசிக்காமல், முஹைதீன் பல்வேறு முடிவுகளை எடுத்துள்ளதாக ரஸ்லான் நேற்று கூறினார்.
கடந்த செவ்வாய்க்கிழமை இரவு, முஹைதீன் தலைமையில் இயங்கும் தேசியக் கூட்டணி அரசாங்கத்திற்கான ஆதரவை மீட்டுக்கொள்ள, அம்னோ ஆலோசித்து வருவதாக, அதன் பொதுச்செயலாளர் அஹ்மத் மஸ்லான் அறிவித்தார்.