பிரதமர் முஹைதீன் யாசின், ஆளும் தேசியக் கூட்டணிக்குள் அம்னோ நிலைத்திருக்க, என்ன சலுகைகளை வழங்க முடியும் என்பதைக் கூற வேண்டுமே ஒழிய, எங்களின் கோரிக்கைகளைக் கேட்கக்கூடாது என்று சிலாங்கூர் அம்னோ தலைவர் இஷாம் ஜலீல் கூறியுள்ளார்.
“எங்கள் கோரிக்கைகள் என்னவென்று, பிரதமர் முஹைதீனுக்குக் கடிதம் எழுதுமாறு பெர்சத்து கேட்டுள்ளதாக நேற்று எனக்கு தெரிவிக்கப்பட்டது. என் கருத்துப்படி, இது பயனற்றது.
“அம்னோவுடன் ஒத்துழைப்பதில் பெர்சத்து தீவிரமாக இருந்தால், அதிகாரத்தில் இருக்கும் பிரதமராகவும் ஆட்சியில் தொடர்ந்து இருக்கவும் பிற கட்சிகளின் ஆதரவு தேவையென்றால், பெர்சத்துவின் தலைவர் என்ற வகையில் அவர்தான் தனது சலுகைகளை அம்னோவுக்கும் பிற கட்சிகளுக்கும் அறிவிக்க வேண்டும்…,” என்று அவர் தனது முகநூல் பதிவில் குறிப்பிட்டிருந்தார்.
முஹைதீன் அதிகாரத்தில் இருப்பதால், என்ன வழங்க முடியும் என்பது அவருக்குதான் நன்கு தெரியும் என்றும் இஷாம் கூறினார்.
“எந்தவொரு கோரிக்கையை முன்வைக்கும் கடிதத்தைப் பிரதமருக்கு எழுதுமாறு பெர்சத்து அம்னோவிடம் சொல்ல தேவையில்லை,” என்று அவர் கூறினார்.
“பேச்சுவார்த்தைகள் வெற்றிகரமாக அமைந்தால், பிறகு எழுத்துப்பூர்வமாக ஒப்பந்தம் செய்துகொள்ளலாம்.
நேற்று, முஹைதீன், பெர்சத்து பொதுச் செயலாளர் ஹம்சா ஜைனுதீன் மூலம், அம்னோவின் கோரிக்கைகளை முறையான கடிதத்தில் தெரிவிக்குமாறு கேட்டுக் கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.