பி.கே.ஆர். தலைவர் அன்வர் இப்ராஹிம் மீது ஓரினப்புணர்ச்சி, தம்மை ஆதரிக்கும் எம்.பி.க்களின் பெயர் பட்டியலை வெளியிட்டது உட்பட ஆறு வழக்குகள் தொடர்பாக விசாரணை நடத்தி வருவதாக போலீசார் உறுதிப்படுத்தியுள்ளனர்.
எந்தவொரு தரப்பினரிடமிருந்தும், அரசியல் அழுத்தத்தையும் அறிவுறுத்தல்களையும் பெறாமல், தொழில்ரீதியாக விசாரணை நடத்தப்பட்டதாக குற்றவியல் புலனாய்வுத் துறை இயக்குநர் ஹுசிர் முகமது தெரிவித்தார்.
அன்வருக்கு ஆதரவளிப்போர் எனக் கூறி வெளியிடப்பட்ட பெயர் பட்டிலை மறுத்து எம்.பி.க்கள் உட்பட, மொத்தம் 113 போலிஸ் புகார்கள் பெறப்பட்டதாக ஹுசிர் தெரிவித்துள்ளார்.
“வலைத்தளத்திலுள்ள அறிக்கைகள் பொதுமக்களுக்கு பயம் அல்லது அச்சுறுத்தலை ஏற்படுத்தும் நோக்கத்துடன் செய்யப்படுகின்றன, இதனால் அவர்கள் நாட்டிற்கோ அல்லது பொது ஒழுங்கிற்கு எதிராகவோ குற்றச்செயலில் ஈடுபட நேரிடலாம்,” என்று அவர் கூறினார்.
ஹுஸீரின் கூற்றுப்படி, விசாரணைகள் தண்டனைச் சட்டத்தின் பிரிவு 505 (பி) மற்றும் தகவல் தொடர்பு மற்றும் பல்லூடகச் சட்டம் 1998, பிரிவு 233 கீழ் வகைப்படுத்தப்பட்டுள்ளது.
எனவே, வெளிப்படையான மற்றும் நியாயமான முறையில் விசாரணைகளை மேற்கொள்ள அனைத்து தரப்பினரும் காவல்துறைக்கு இடம் கொடுக்க வேண்டும் என்று ஹுசிர் கேட்டுக்கொண்டார்.
“பொது ஒழுங்கு மற்றும் பாதுகாப்பை வேண்டுமென்றே அச்சுறுத்துபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்,” என்றும் அவர் கூறினார்.
நாடாளுமன்ற உறுப்பினர்களின் பட்டியல் சம்பந்தப்பட்ட புகார் தவிர, விசாரிக்கப்பட்ட மற்ற ஐந்து வழக்குகள் :-
- மக்களவையில் பெரும்பான்மை ஆதரவு இல்லாததால், பிரதமர் தலைமையிலான அரசாங்கம் வீழ்ச்சியடைந்துள்ளது என்ற பிரச்சினை;
- ஐடில் அஸிம் அபு ஆதாம் தொடர்பான ஓரினப்புணர்ச்சி வழக்கு;
- நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணையின் போது, சூதாட்ட கடை செயல்படுவதாக பேசிய வீடியோ பதிவு;
- மலேசியாவில் 6.7 மில்லியன் வெளிநாட்டினர் இருப்பதாகக் குற்றஞ்சாட்டிய வீடியோ பதிவு;
- உண்மையான ஆவணங்களை மாட்சிமை தங்கியப் பேரரசரிடம் சமர்ப்பித்துவிட்டதாக கூறி நடத்தப்பட்ட பத்திரிக்கையாளர் சந்திப்பு