அடுத்த மாதம் தாக்கல் செய்யப்படவுள்ள 2021 வரவுசெலவுத் திட்டத்தில், அரசு ஊழியர்களுக்குச் சம்பள உயர்வு மற்றும் மாதாந்திர போனஸ் வழங்குவது குறித்து பரிசீலிக்குமாறு அரசு ஊழியர்களின் சங்கம் (CUEPACS) அரசாங்கத்தைக் கேட்டுக்கொண்டது.
நாட்டின் தற்போதைய நிலைமை மற்றும் உயர்ந்துவரும் வாழ்க்கைச் செலவுகள் ஆகியவற்றின் அடிப்படையில் இந்த விண்ணப்பம் செய்யப்படுவதாக அதன் தலைவர் அட்னான் மாட் கூறினார்.
“நாட்டில் பொருட்களின் விலையோடு, சுகாதாரம், போக்குவரத்து, கல்வி போன்ற அடிப்படைச் சேவைகளின் விலையும் அதிகரித்துள்ளது.
“ஆக, அடிப்படைத் தேவைகளின் விலை அதிகரிப்பிற்கு ஏற்ப, அரசு ஊழியர்களுக்கும் மற்றவர்களுக்கும் சம்பளமும் அதிகரிக்கப்பட வேண்டும்,” என்று, இன்று பெர்னாமா டிவி தொடர்பு கொண்டபோது அவர் கூறினார்.
முந்தைய ஆண்டுகளைப் போல, சிறப்பு நிதிஉதவி என்றில்லாமல், அரசு ஊழியர்களுக்கு மாதாந்திர சம்பள வடிவில் போனஸை அரசாங்கம் அறிவிக்கும் என்றும் கியூபேக்ஸ் நம்புகிறது, இது நாட்டின் பொருளாதாரத்தையும் உயர்த்த உதவும்.
“கடைசியாக அரசு ஊழியர்களுக்குப் போனஸ் கிடைத்தது 2012-ம் ஆண்டு -ஒன்றரை மாத சம்பளம் அல்லது குறைந்தபட்சம் RM1,500 – அதன்பிறகு அரசு ஊழியர்கள் இதுவரை போனஸ் பெறவே இல்லை.
“மாறாக, முந்தைய ஆண்டுகளில், பெருநாட்களுக்கு முன்னதாக சிறப்பு நிதி உதவி RM500 மற்றும் ஆண்டின் தொடக்கத்தில் பள்ளி அமர்வு துவங்குவதற்கு முன்பாக RM500 என்று மட்டுமே வழங்கப்பட்டுள்ளது,” என்று அவர் கூறினார்.
- பெர்னாமா