ஜிஇ15 வரை, டாக்டர் மகாதீரே பிரதமராக இருக்கட்டும், பெஜுவாங் முன்மொழிவு

15-வது பொதுத் தேர்தல் (ஜிஇ) வரை, மூன்றாவது முறையாகத் தங்கள் தலைவர் டாக்டர் மகாதீர் முகமதுவே பிரதமராக இருக்கட்டும் என்று பெஜுவாங் தானாஆயேர் கட்சி (பெஜுவாங்) பரிந்துரைத்துள்ளது.

அடுத்த பொதுத் தேர்தல் வரையில், நாட்டைக் காப்பாற்ற இது அவசியமான ஒன்று என்று மகாதீரின் அரசியல் செயலாளர் அபுபக்கர் யஹ்யா கூறினார்.

கட்சியின் இந்த முடிவுக்கு, மகாதீரீன் மகனும், பெஜூவாங் கட்சியின் தலைவருமான முக்ரிஸும் சம்மதம் தெரிவித்துள்ளதாகவும் அவர் சொன்னார்.

பெஜுவாங் கட்சி, சங்கங்களின் பதிவுத் துறையில், பதிவுக்காக இன்னும் காத்திருப்பது இங்குக் குறிப்பிடத்தக்கது.

பி.கே.ஆர். தலைவர் அன்வர் இப்ராஹிம், அரசாங்கத்தை அமைப்பதற்கு போதுமான எம்.பி.க்களின் ஆதரவு தனக்கு இருப்பதாகக் கூறியதால், நாட்டின் அரசியல் தொடர்ந்து நிலையற்ற நிலையில் இருக்கும் இந்நேரத்தில் இந்த அறிக்கை வந்துள்ளது.

மகாதீர் உட்பட, ஐந்து பெஜுவாங் எம்.பி.க்கள் இதற்கு முன்னர் முஹைதீனுக்கு எதிராக நம்பிக்கையில்லாத் தீர்மானத்தைச் சமர்ப்பித்துள்ளனர்.

தற்போது பெஜூவாங் எந்தக் கூட்டணியிலும் சேரவில்லை, ஆனால் மகாதீர் தனது முன்னாள் போட்டியாளரான அம்னோவின் மூதந்த் தலைவர் தெங்கு ரஸலீக் ஹம்சாவுடன் இணைந்து பணியாற்றக்கூடும் என்று உறுதிப்படுத்தப்படாத ஊகங்கள் உள்ளன.