கோவிட் 19 : இன்று 871 புதிய நேர்வுகள், 7 மரணங்கள்

நாட்டில் இன்று, 871 புதிய கோவிட் -19 தொற்றுகள் பதிவாகியுள்ளன, இது ஜனவரி மாதத்தில் தொற்றுநோய் தொடங்கியதில் இருந்து, தொடர்ந்து இரண்டாவது நாளாக மற்றொரு அதிக எண்ணிக்கை என்று சுகாதார அமைச்சின் தலைமை இயக்குநர் டாக்டர் நூர் ஹிஷாம் அப்துல்லா தெரிவித்துள்ளார்.

இன்று மாலை, புத்ராஜெயாவில் செய்தியாளர் சந்திப்பில் பேசிய நூர் ஹிஷாம், இன்று ஏழு இறப்புகள் நேர்ந்துள்ளதாகவும் குறிப்பிட்டார்.

6 பேர் சபாவிலும், சிலாங்கூரில் ஒருவரும் இத்தொற்றுக்குப் பலியானதாக அவர் கூறினார்.

சிகிச்சை பெற்றுவரும் கோவிட் -19 நோயாளிகளின் எண்ணிக்கையும், முதல் முறையாக 7,000-ஐ தாண்டி, இப்போது 7,049-ஆக உள்ளது.

தீவிரச் சிகிச்சைப் பிரிவில் மொத்தம் 86 நோயாளிகள் சிகிச்சை பெற்று வருகின்றனர், அவர்களில் 28 பேருக்குச் சுவாசக்கருவி தேவைப்படுகிறது.

அதேசமயம், இன்று 701 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

சபாவில் இன்று 702 புதியத் தொற்றுகள் பதிவாகியுள்ளன. அதனை அடுத்து, சிலாங்கூரில் 72, பினாங்கில் 45, பேராக்கில் 10, கெடாவில் 9, கோலாலம்பூரில் 7, சரவாக்கில் 5, நெகிரி செம்பிலானில் 3, திரெங்கானுவில் 2, ஜொகூர் மற்றும் மலாக்காவில் 1 என இன்றையப் பதிவுகள் காட்டுகின்றன.

இன்று நான்கு புதியத் திரளைகள் பதிவாகியுள்ளன. பினாங்கில், தென் செப்ராங் பிறை, மத்திய செப்ராங் பிறை மாவட்டங்களை உள்ளடக்கிய அல்மா திரளை (Alma cluster) மற்றும் சிலாங்கூரில், பெட்டாலிங், கோலா லங்காட் மற்றும் கிள்ளான் மாவட்டங்களையும் நெகிரி செம்பிலானில் சிரம்பானையும் உள்ளடக்கிய ஆட்டோ திரளையும் (Auto cluster) அவற்றுள் அடங்கும்.

மற்ற இரண்டு திரளைகள் கோத்தா கினபாலுவில், கெபாயான் சிறைச்சாலை மற்றும் லாபுவானில், பா லாயாங்கான் ஆகும்.