ரெட்ஸுவான் : பிரதமர் அமைச்சரவையை மாற்றியமைக்க தேவையில்லை

பிரதமர் துறை அமைச்சின், அமைச்சர் மொஹமட் ரெட்ஸுவான் யூசோப், சில கட்சிகளைத் திருப்திப்படுத்துவதற்காக, தேசியக் கூட்டணி அரசு (பி.என்.) அமைச்சரவையை மாற்றியமைக்கத் தேவையில்லை என்று கருதுவதாகக் கூறியிருக்கிறார்.

பிரதமர் முஹைதீன் யாசின் எதுவும் செய்யத் தேவையில்லை, பி.என்.-இல் உள்ள அனைத்து கட்சிகளும் கூட்டணியில் ஒத்துழைப்பைப் பேண வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.

“நாம் ஏன் அமைச்சரவையை மாற்றியமைக்க வேண்டும்? நாம் சில மாதங்கள் மட்டுமே அரசாங்கத்தில் இருந்திருக்கிறோம்? அமைச்சரவை மறுசீரமைப்பு செய்யப்பட வேண்டும் என்று கோரும் எவருக்கும் அது அவரவர் தனிப்பட்ட கருத்து,” என்று அவர் கூறியதாக, பெரித்தா ஹரியான் மேற்கோளிட்டுள்ளது.

இந்த நேரத்தில், அரசாங்கத்தில் ஏதேனும் பிரச்சினைகள் இருந்தால் பேச்சுவார்த்தை மூலம் அவைத் தீர்க்கப்பட வேண்டும் என்றும், நேற்றிரவு ஆயேர் கெரோவில் நடந்த ஒரு நிகழ்ச்சியில், பத்திரிக்கையாளர் சந்திப்பில் அவர் கூறியுள்ளார்.

தேசியக் கூட்டணிக்குள் ஒத்துழைப்பைப் பேணுவதற்கு, அம்னோ புதிய நிபந்தனைகளை விதித்துள்ளதன் அடிப்படையில், அவர் இவ்வாறு கூறியதாகத் தெரிகிறது.

இதற்கிடையில், நாடு கோவிட் -19 தொற்றுநோயை எதிர்கொண்டிருக்கும் இவ்வேளையில் அரசாங்க மறுசீரமைப்பு தேவையில்லை என்றும், தற்போதுள்ள அமைச்சரவை உறுப்பினர்கள் தங்கள் கடமைகளைச் சிறப்பாகவே செய்கின்றனர் என்றும் பெர்சத்து கட்சியின் உச்சமன்ற குழுவின் உறுப்பினருமான ரெட்ஸுவான் கூறினார்.