நிபந்தனைக்குட்பட்ட நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணையின் (பி.கே.பி.பி) கீழ் பொருளாதார நடவடிக்கைகளை மட்டுமே அனுமதிக்க வேண்டும் என்று, தேசியப் பாதுகாப்பு மன்றக் கூட்டத்தில் சுகாதார அமைச்சு முன்மொழியவுள்ளதாக அதன் இயக்குநர் ஜெனரல் டாக்டர் நூர் ஹிஷாம் அப்துல்லா தெரிவித்தார்.
“பி.கே.பி.பி.யை இறுக்கமாக்க சுகாதார அமைச்சு முன்மொழிய விரும்புகிறது, நாங்கள் பொருளாதாரத் துறையை மட்டுமே அனுமதிக்க எண்ணம் கொண்டுள்ளோம்,” என்று, இன்று சுகாதார அமைச்சகத்தில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் கூறினார்.
ஒவ்வொரு நாளும் கோவிட்-19 தொற்றின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவதால், அதனைச் சமன் செய்வதற்கான அணுகுமுறையின் ஒரு பகுதி இது என்று நூர் ஹிஷாம் கூறினார்.
சபா மற்றும் கிள்ளான் பள்ளத்தாக்கு போன்ற பகுதிகளில், கல்வி, விளையாட்டு மற்றும் சமூகத் துறைகளைக் கட்டுப்படுத்த வேண்டிய அவசியம் உள்ளது என்றார் அவர்.
பி.கே.பி.பி. பகுதிகளில் உடற்பயிற்சி கூடம், வணிகக் கால்பந்து மைதானம் மற்றும் ஃபுட்சால் மையங்களை மீண்டும் திறக்க, அனுமதிக்கவுள்ளதாக, நேற்று பாதுகாப்பு அமைச்சர் இஸ்மாயில் சப்ரி யாகோப் தெரிவித்தார்.
இளைஞர் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சின் விண்ணப்பங்களைப் பரிசீலித்து, அரசாங்கம் இந்த முடிவை எடுத்ததாக இஸ்மாயில் சப்ரி கூறியிருந்தார்.