அஜீஸ் : முகிடினின் அமைச்சரவை மறுசீரமைப்பு திட்டத்தை நிராகரிக்கும் உரிமை மன்னருக்கு உண்டு

தற்போது, பிரதமருக்கான ஆதரவு கேள்விக்குறியாக இருக்கும் பட்சத்தில், முகிடினின் அமைச்சரவை மறுசீரமைப்புத் திட்ட உத்தேசத்தை நிராகரிக்கும் உரிமை மாட்சிமை தங்கியப் பேரரசருக்கு உண்டு.

அரசியலமைப்பு நிபுணர் டாக்டர் அஜீஸ் பாரி, சாதாரண சூழ்நிலையில் அமைச்சரவையை மறுசீரமைப்பது பிரதமரின் உரிமை, ஆனால் பெரும்பான்மை சர்ச்சைக்குரியதாக இருக்கும்போது நிலைமை வேறுபட்டது என்று கூறியுள்ளார்.

“சாதாரண சூழ்நிலைகளில், பிரதமர் அதனைத் தீர்மானிக்கலாம், ஆனால் இப்போது அது வேறுபட்டது, ஏனென்றால் முகிடினுக்கு இன்னும் பெரும்பான்மை கிடைக்குமா என்பது தெளிவாகத் தெரியவில்லை.

“எனவே, அமைச்சரவை (பிரதமர்) மறுசீரமைப்பு திட்டத்தை நிராகரிக்க மன்னருக்கு உரிமை உண்டு,” என்று அவர் மலேசியாகினியிடம் கூறினார்.

அம்னோ கோரியபடி, முகிடின் நாளை அமைச்சரவை மறுசீரமைப்பை மேற்கொள்வார் என்ற ஊடக அறிக்கைகள் குறித்து கருத்துரைத்த அஜீஸ் இவ்வாறு கூறினார்.

அமைச்சரவை மறுசீரமைப்பு குறித்த அறிவிப்பை நாளை பிரதமர் வெளியிடுவார் என்று மிங்குவான் மலேசியா பத்திரிக்கை செய்தியை அது மேற்கோளிட்டுள்ளது.

தேசியக் கூட்டணிக்கான தங்களின்  ஆதரவை மீட்டுக்கொள்ளாமல் இருக்க, அம்னோ நாடாளுமன்ற உறுப்பினர்கள் விடுத்த கோரிக்கையின் இறுதி நடவடிக்கை இது.

கடந்த செவ்வாயன்று, தேசியக் கூட்டணி அரசாங்கத்திற்கான தங்கள் ஆதரவை மறுபரிசீலனை செய்ய அம்னோ முடிவெடுத்தது. அதன்படி, புதிய நிபந்தனைகளைச் சமர்ப்பித்து, மேலும், ஒத்துழைப்பைத் தொடர புதிய ஒப்பந்தம் எழுத்துப்பூர்வமாக செய்யப்பட வேண்டும் என்றும் அம்னோ கோரிக்கை விடுத்தது.

கடந்த அக்டோபர் 16-ம் தேதி, அம்னோ உச்சமன்ற உறுப்பினர் தாஜுதீன் அப்துல் ரஹ்மான், துணைப் பிரதமர் பதவியும், அமைச்சரவையில் முக்கியமான பதவிகள் சிலவும் அம்னோவுக்கு வழங்கப்பட வேண்டும், ஏனெனில் அம்னோவுக்கு நாடாளுமன்றத்தில் அதிக இடங்கள் உள்ளன என்று கூறியிருந்தார்.

இதற்கிடையில், பெரும்பான்மை ஆதரவு முகிடினின் தேசிய கூட்டணி அரசாங்கத்திற்கு ஒரு பிரச்சினை என்றும், நிலைமை மோசமடைவதற்கு முன்னர் அதனை உடனடியாகத் தீர்க்க வேண்டும் என்றும் அஜீஸ் கூறினார்.

“இந்தக் குழப்பத்தைத் தீர்க்க ஒரே வழி நாட்டுத் தலைவரின் தலையீடுதான்,” என்றும் அவர் தெரிவித்தார்.