குலா : அரசாங்கம் தொடர்ந்து அரசியல் செய்தால், ஆயிரக்கணக்கானோர் வேலை இழப்பார்கள்

தேசியக் கூட்டணி அரசாங்கம் தொடர்ந்து அரசியலில் மும்முரமாக இருந்தால், ஆயிரக்கணக்கான மலேசியர்கள் வேலை இழக்க நேரிடும் என்று முன்னாள் மனிதவள அமைச்சர் எம் குலசேகரன் எச்சரித்தார்.

“அடுத்த நான்கு முதல் ஐந்து மாதங்களில், நாட்டில் 51,000-க்கும் மேற்பட்ட மளிகைக் கடைகள் மூடப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. நிபந்தனைக்குட்பட்ட நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணையின் (பி.கே.பி.பி.) ஆரம்பத் தாக்கத்தாலும், பல வணிகங்கள் இ-காமர்ஸுக்கு மாறத் தொடங்கியதாலும் இந்நிலை ஏற்பட்டுள்ளது.

“இதனால், நேரடியாக 150,000 -க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலை இழக்க நேரிடும்.

“கோவிட் -19 நெருக்கடியால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ள சுற்றுலாத்துறையுடன், இந்தச் சில்லறை வணிகத்துறை தொடர்புடையது என்பதால், குறிப்பிட்ட கால இடைவெளியில் அவற்றின் எண்ணிக்கை குறைய வாய்ப்புள்ளது,” என்று அவர் இன்று ஓர் அறிக்கையில் தெரிவித்தார்.

இதுபோன்ற சில்லரைத் தொழில்துறைகளைக் காப்பாற்ற பயனுள்ள உத்திகளைக் கொண்டுவரத் தவறிய முகிடின் தலைமையிலான தேசியக் கூட்டணி அரசாங்கம், அரசியல் விளையாட்டில் மும்முரமாக இருக்கிறது என்று அந்த ஈப்போ பாராட் நாடாளுமன்ற உறுப்பினர் மேலும் கூறினார்.

“சபாவைக் கைப்பற்றுவதிலும், நாடாளுமன்றத்தில் அதன் மெலிதான பெரும்பான்மையைக் காப்பாற்றுவதிலும் அரசாங்கம் மும்முரமாக உள்ளது,” என்றார் அவர்.

அந்த டிஏபி தலைவரின் கூற்றுப்படி, 3.21 பில்லியன் அமெரிக்க டாலர்களை (RM 13.8 பில்லியன்) ஊதிய மானியங்களுக்காக அரசாங்கம் ஒதுக்கியுள்ளது. அதேசமயம், பொருளாதார நிச்சயமற்ற இக்காலகட்டத்தில் சிங்கப்பூர் தனது தொழிலாளர்களின் ஊதியங்களுக்கு மானியம் வழங்க அல்லது இணை நிதி வழங்க 14.6 பில்லியன் அமெரிக்க டாலர்களை ஒதுக்கியுள்ளது.

“சிங்கப்பூரில் ஊதிய மானியங்கள் அனைத்து தொழிலாளர்களுக்கும் ஒதுக்கப்பட்டுள்ள நிலையில், மலேசியாவில் RM4,000 -க்கும் குறைவாக சம்பாதிப்பவர்கள் மட்டுமே இந்த ஊதிய மானியங்களுக்குத் தகுதியுடையவர்கள்.

“வேலை இழப்புகளால் பாதிக்கப்படவுள்ள 59 விழுக்காடு தொழில்முறை மற்றும் தொழில்நுட்பப் பிரிவினர் இதில் அடங்கமாட்டார்கள்.

“வேலையின்மை விகிதம் சமீபத்தில் 5.3 விழுக்காட்டிலிருந்து 4.7 விழுக்காட்டிற்குக் குறைந்துவிட்ட போதிலும், இந்தத் துறைகளில் வணிக மற்றும் உழைப்பாளிகளின் உண்மையான நிலையை இது பிரதிபலிக்கவில்லை. வணிகத் துறைகள் மூடப்படுவதும் தொழிலாளர் பணிநீக்கங்களும் தொடர்ந்து நடந்து கொண்டுதான் இருக்கின்றன,” என்று அவர் கூறினார்.

எனவே, இவற்றில் தீவிரக் கவனம் செலுத்தி, வணிகங்கள் மூடப்படுவதைக் கட்டுப்படுத்த கூடுதல் நடவடிக்கைகளை எடுக்குமாறு குலசேகரன் அரசாங்கத்தைக் கேட்டுக்கொள்கிறார்.