அல்தாந்துயா வழக்கு : நஜிப்பின் விண்ணப்பம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது

அல்தான்துயா ஷாரிபுவின் கொலை வழக்கில், சிறப்பு நடவடிக்கை பிரிவின் முன்னாள் காவல்துறை அதிகாரி அசிலா ஹத்ரியின் மரண தண்டனையை மறுஆய்வு வழக்கில் தலையிட, நஜிப் ரசாக் செய்திருந்த விண்ணப்பத்தை மத்திய நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.

அம்முன்னாள் பிரதமரின் தலைமை வழக்குரைஞர் முஹம்மது ஷாஃபி அப்துல்லா இந்த விஷயத்தை மலேசியாகினியிடம் இன்று உறுதிப்படுத்தினார்.

சிலாங்கூர், கோலாலம்பூர் மற்றும் புத்ராஜெயாவில், கடந்த வாரம் தொடங்கிய நிபந்தனைக்குட்பட்ட நடமாட்டக் கட்டுப்பாட்டு உத்தரவினால் (பி.கே.பி.பி.) வழக்கு தள்ளிவைக்கப்பட்டதாக அவர் கூறினார்.

கடந்தாண்டு டிசம்பர் 5-ஆம் தேதி, மரண தண்டனை விதிக்கப்பட்டு, காஜாங் சிறையிலிருந்த அசிலா, தனது தண்டனையை மறுஆய்வு செய்யும்படி விண்ணப்பம் செய்தார்.

அப்போது துணைப் பிரதமராக இருந்த நஜிப்தான், அல்தான்துயாவைக் கொல்ல உத்தரவிட்டார் என்ற குற்றச்சாட்டை முன்வைத்து, தன் மீதான தண்டனையை மறுஆய்வு செய்யுமாறு, 32 பக்கச் சட்டப்பூர்வ அறிக்கையின் வழி அசிலா விண்ணப்பம் செய்ததாக மலேசியாகினி செய்தி வெளியிட்டிருந்தது.