பொருளாதார வீழ்ச்சிக்கு அரசியல் உறுதியற்ற தன்மையே காரணம்!

நாட்டில் பொருளாதார வீழ்ச்சிக்கு, அரசியல் உறுதியற்ற தன்மையேக் காரணம் என்று பெரும்பான்மையான மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

‘எமீர் ரிசர்ச்’ எனும் அந்த ஆய்வுக்குழுவின் கணக்கெடுப்பின்படி, கோவிட் -19 தொற்றுநோயின் பாதிப்புகள் வருத்தமளிக்கும் வகையில் இருந்தாலும், அது தற்காலிகமானது என்று ஆய்வின் பங்கேற்பாளர்கள் கருதுவதாக அது கூறியுள்ளது.

மாறாக, நாட்டில் அரசியல் உறுதியற்ற தன்மை, நாடு எதிர்கொள்ளும் பொருளாதார மற்றும் சமூகப் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கான செயல்முறையைத் தாமதப்படுத்துவது போன்றவை கோவிட் -19 தொற்றின் பாதிப்புகளைவிட மோசமானது என்றும் அவர்கள் நம்புகிறார்கள்.

“இந்தக் காலகட்டத்தில், மக்கள் எதிர்கொள்ளும் நெருக்கடிகளுக்கு உடனடி தீர்வுகாண நேரத்தைச் செலவிட வேண்டும்; அரசியல் விளையாட்டுக்கள், மோசடி மற்றும் நாடகங்களுக்காகச் செலவிடக்கூடாது,” என்று மக்கள் கருதுகின்றனர்.

இந்த ஆய்வில் 63 பேர் பங்கெடுத்தனர், அவர்களில் பெரும்பான்மையினர் நடுத்தர மற்றும் குறைந்த வருமானம் கொண்டவர்கள்.