முகிடின் நாட்களை எண்ணிக்கொண்டுள்ளாரா?

கருத்து | அடுத்தப் பொதுத் தேர்தல் வரை பிரதமரை மாற்ற அவசியம் இல்லை என பி.என். தலைமைச் செயலாளர் அனுவார் கூறியுள்ளார்.

இப்போது நாம் கோவிட் -19 தொற்று பரவலை எப்படி கட்டுப்படுத்துவது என்பது மீது கவனம் செலுத்த வேண்டுமென அவர் கூறியிருந்தார்.

பெரும்பான்மை அம்னோ எம்.பி.-க்களுக்கு, முகிடின் மீது திருப்தி இல்லையென்றால், அடுத்தப் பொதுத் தேர்தல் வரை ஏன் காத்திருக்க வேண்டும்?

அம்னோ உறுப்பினர்களுக்கு அதிக முக்கியத்துவம் வழங்கும் வகையில் அமைச்சரவையை மறுசீர் அமைக்க முகிடின் விரும்புகிறாரா என்று எனக்குத் தெரியவில்லை.

எந்தவொரு கொள்கையும் இல்லாத ஒரு கட்சி என்ற வகையில், முகிடின் வழங்கும் எந்தப் பதவியையும் அம்னோ ஏற்றுக்கொள்ளும் வாய்ப்புள்ளது.

எப்படியிருந்தாலும், இந்த நேரத்தில் எதுவும் உறுதியில்லை.

அம்னோ எம்.பி.-க்கள் கலவையான ஆதரவைத் தெரிவித்தால், அது அன்வாருக்குச் சாதகமாக முடியவும் வாய்ப்புள்ளது.

அன்வருக்கு எம்.பி.க்களின் பெரும்பான்மை ஆதரவு இல்லை என்பது பிரச்சனையல்ல; அந்தப் பெரும்பான்மையைப் பேரரசரிடத்தில் அல்லது நாடாளுமன்றத்தில் நிரூபிக்க அவருக்கு நியாயமான வாய்ப்பு வழங்கப்படவில்லை என்பதுதான் இங்குப் பிரச்சனை.

புத்ராஜெயாவைக் கைப்பற்ற அன்வார் பல தடைகளைத் தீர்க்க வேண்டியுள்ளது.

இது ஒரு மூடுபனி காலம்.

தற்போது டாக்டர் மகாதிர் ஓய்வெடுப்பதாக அர்த்தம் இல்லை, பதவியைப் பிடிக்க ஒரு வாய்ப்புக்காக அவர் காத்திருக்கிறார்.

ஒருவேளை, நாட்டின் மிகச் சிறந்த பிரதமர் தான்தான் என்ற நம்பிக்கை உலகில் அவர் வாழ்கிறாரோ என்னவோ.

முகிடின் ஆரம்பத்தில் ஓரளவு புகழ் பெற்று திகழ்ந்தார், புறக்கதவு வழியாக ஆட்சிக்கு வந்தவர் எனும் குற்றச்சாட்டை அகற்ற முடியாத போதிலும்.

கோவிட் -19 தொற்றின் முதல் அலை நன்கு நிர்வகிக்கப்பட்டது, அதற்காக சுகாதாரத்துறை தலைமை இயக்குநரின் திறமைக்கு நன்றி சொல்ல வேண்டும், அமைச்சருக்கு அல்ல, அத்தொற்றின் இரண்டாவது அலைக்கு அரசாங்கம் தயாராக இல்லை என்று தெரிகிறது.

அரசாங்கத்தை நடத்துபவர் யார் என்று தெரியாத நிலையில் நாம் இருக்கிறோம்.

முக்கிய அமைச்சரவைப் பதவிகளைப் பெர்சத்து கொண்டுள்ளது, ஆனால் நாட்டின் விவகாரங்களை நிர்வகிப்பதில் அத்தலைவர்களுக்குப் பங்களிக்க முடியவில்லை.

முகிடின் திறமையற்றவர் என்பதால் அம்னோ கோபப்படவில்லை, ஆனால் அம்னோவுக்குப் போதுமான பதவிகளை அவர் ஒதுக்கவில்லை என்பதே அதன் கோபம்.

பெர்சத்து – குறைந்த எண்ணிக்கையிலான எம்.பி.க்களைக் கொண்ட ஒரு கட்சி – ஆனால், அமைச்சரவையில் அதிக எண்ணிக்கையை அது வைத்துள்ளது.

பாஸ்-உம் அம்னோவும், தேசிய ஒருமித்த கருத்து என்ற பெயரில், ஒருவருக்கொருவர் ஒத்துழைப்பு நல்கினாலும், அவர்களுக்கிடையில் விரிசல்கள் தோன்றத் தொடங்கியுள்ளன.

உண்மையில், பாஸ், அம்னோவை விட நாடாளுமன்றத்தில் குறைவான இடங்களைக் கொண்டிருந்தாலும், பெர்சத்துவுக்கு அது விருப்பமான கட்சியாகத் திகழ்கிறது. அரசாங்கத் தொடர்புடைய நிறுவனங்களால், அம்னோவைவிட பாஸ் அதிக இலாபமடைந்துள்ளதாகத் தெரிகிறது.

அம்னோவின் ஒப்புதலைப் பெற அமைச்சரவை மறுசீரமைப்பில் கடைசி நிமிட ஒப்பந்தம் ஏதும் இல்லாவிட்டால், பெர்சத்துவுக்கும் அம்னோவிற்கும் இடையே மோதல் ஏற்படவும் வாய்ப்புள்ளது.

அது நடந்தால், அன்வார் பெரும்பான்மை ஆதரவோடு, அடுத்த அரசாங்கத்தை அமைக்கலாம்.

முகிடின் தனது நாட்களை எண்ணிக் கொண்டிருப்பதாகத் தெரிகிறது. அனுவாருடைய ஆலோசனை எதுவும் அடுத்த பொதுத் தேர்தல் வரை முகிடினுக்கு உதவாது போலும்.


பி இராமசாமி

பிறை சட்டமன்ற உறுப்பினர், பினாங்கு மாநிலத் துணை முதலமைச்சர் (II)