பி.எஸ்.எம். : நீர் நிர்வகிப்பில் தோல்வி, சிலாங்கூர் எம்.பி. பதவி விலக வேண்டும்

சிலாங்கூர் பிஎஸ்எம் (மலேசிய சோசலிசக் கட்சி) தலைவர், வி செல்வம், அம்மாநிலத்தின் நீர் இடையூறுக்குப் பொறுப்பேற்று, மந்திரி பெசார் அமிருடின் ஷாரி பதவி விலக வேண்டுமென அழைப்பு விடுத்துள்ளார்.

“சிலாங்கூரில், நீர் நெருக்கடிக்குத் தீர்வே இல்லாமல், நிலைமை நாளுக்கு நாள் மோசமடைந்து வருகிறது.

“சிலாங்கூர் மாநில அரசாங்கத்தால், இனி சிலாங்கூரில் நீர் நிர்வாகத்தைச் சமாளிக்க முடியாது என்பதையே இது காட்டுகிறது. இதற்கு முழுப் பொறுப்பேற்று மாநில மந்திரி பெசாரும் சிலாங்கூர் நீர் வாரியத்தின் தலைமை நிர்வாக அதிகாரி சுஹைமி கமரல்ஜமானும் பதவி விலக வேண்டுமென சிலாங்கூர் பிஎஸ்எம் கேட்டுக்கொள்கிறது,” என்று அவர் இன்று ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

சில நாட்களுக்கு முன்புதான், ஜாலான் புக்கிட் கூடாவில் நீர்க் குழாய்கள் உடைந்து, கிள்ளான் மற்றும் ஷா ஆலாமைச் சுற்றியுள்ள நுகர்வோரைப் பாதித்தது என்று செல்வம் கூறினார்.

அந்தப் பிரச்சினை தீர்வதற்கு முன்பே, அக்டோபர் 19-ஆம் தேதி, சிலாங்கூர் ஆற்றில் நீர் மாசுபாடு மீண்டும் நிகழ்ந்து, கோலாலம்பூர், பெட்டாலிங் ஜெயா, ஷா ஆலம், கோல சிலாங்கூர், கோம்பாக் மற்றும் கோல லங்காட் ஆகிய இடங்களில் உள்ள 1,292 பகுதிகளில் ஒரு மில்லியனுக்கும் அதிகமான பயனர்களைப் பாதித்துள்ளது,” என்று அவர் மேலும் கூறினார்.

இந்தப் பதவி விலகல் மட்டுமல்லாமல், இது ஒரு சாதாரண பிரச்சினை அல்ல என்பதையும் மாநில அரசு புரிந்து கொள்ள வேண்டும் என்றும் சிலாங்கூர் பிஎஸ்எம் விரும்புகிறது என்றார் செல்வம்.

“உள்ளூர் சபை மட்டத்தில் ஒலி கண்காணிப்பு வழிமுறைகளுக்கு மேலதிகமாக கடுமையான சட்டங்கள் மற்றும் தண்டனை நடவடிக்கைகள், (லுவாஸ்) ஆகியவை உடனடியாக செயல்படுத்தப்பட வேண்டும்,” என்று அவர் மேலும் கூறினார்.

“ஊராட்சி மன்றம், சுற்றுச்சூழல் துறை மற்றும் சிலாங்கூர் நீர் மேலாண்மை வாரியம் போன்றவை கடுமையான சட்டங்களையும் தண்டனைகளையும் உடனடியாக நடைமுறைபடுத்த வேண்டும்,” என்று அவர் மேலும் சொன்னார்.

மாநில நிதியுதவி கொண்ட வீட்டுப் பகுதிகளில், மழைநீரைச் சேமித்தல் போன்ற மாற்று நடவடிக்கைகளைச் சிலாங்கூர் அரசு செயல்படுத்த வேண்டும் என்றும் செல்வம் பரிந்துரைத்தார்.

“இதன்வழி, உள்ளூர் நீர் தேவைகளின் பிரச்சினையைத் தீர்க்க முடியும், நுகர்வோரும் பாதிக்கப்பட மாட்டார்கள்,” என்று அவர் கூறினார்.

உடைந்த நீர்க் குழாய்களின் பிரச்சினைகள் மீண்டும் வராமல் தடுக்க, வழக்கமான பராமரிப்பு திட்டங்களோடு, அட்டவணையிடப்பட்ட பராமரிப்புகளையும் செயல்படுத்துமாறு செல்வம் அரசாங்கத்திற்கு அழைப்பு விடுத்துள்ளார்.

“நீர் அடிப்படை தேவை, எனவே அது சிக்கலின்றி மக்களை சென்றடைய போதுமான நிதி வழங்க வேண்டியது மாநில அரசின் பொறுப்பாகும்.

பழைய குழாய்கள், கசிவுகள் மற்றும் பராமரிப்பு தேவைப்படும் சிக்கல்களை அடையாளம் காண சிலாங்கூர் நீர் வாரியம் அனைத்து நீர் சுத்திகரிப்பு நிலையங்களையும் விநியோகப் பகுதிகளையும் கண்காணித்து, ஆய்வு செய்ய வேண்டும் என்றும் செல்வம் கூறினார்.

“அதோடுமட்டுமின்றி, இந்தப் பணியில் ஈடுபடும் ஊழியர்களுக்குச் சிக்கல்களை திறமையாகவும் விரைவாகவும் கையாளப் பயிற்சியும் அளிக்க வேண்டும்,” என்று அவர் மேலும் தன் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.