மூன்றாவது முறையாக, நாட்டின் நிர்வாகத்தை வழிநடத்த முன்னாள் பிரதமர் மகாதீர் முன்மொழியப்பட்டதற்கு எதிராக ராம்கர்பால் சிங் இன்று கடுமையாக விமர்சரித்துள்ளார்.
புக்கிட் கெலுகோர் நாடாளுமன்ற உறுப்பினருமான அவர், மகாதீரின் கடந்த கால நடவடிக்கைகளே நாட்டின் தற்போதைய நிலைமைக்குக் காரணம் என்றும் குற்றம் சாட்டினார்.
“பக்காத்தான் ஹராப்பான் அரசாங்கத்தில், உங்களுடன் பணியாற்றியதை எண்ணி நான் வருந்துகிறேன். இந்த நாடு இப்போது இதுபோன்ற சூழ்நிலையில் இருப்பதற்கு நீங்கள்தான் காரணம். இந்த நாட்டிற்குச் சீர்திருத்தம் தேவைப்படுவதற்கான காரணம் நீங்கள்தான்.
“இன்று நீங்கள், நாட்டைக் காப்பாற்ற விரும்புவதாகச் சொல்கிறீர்கள்? அதைச் செய்யக்கூடிய கடைசி நபர் நீங்களாகதான் இருப்பீர்கள்,” என்று அவர் இன்று ஓர் அறிக்கையில் தெரிவித்தார்.
மகாதீரால் நிறுவப்பட்ட பெஜுவாங் கட்சியின் முன்மொழிவு குறித்து – முஹைதீன் யாசினுக்குப் பதிலாக ஜிஇ15 வரை மகாதீர் பிரதமராக நியமிக்கப்பட வேண்டும் – ராம்கர்பால் கருத்து தெரிவித்தார்.
“கோவிட் -19 நெருக்கடியைக் கையாள்வதில் பிரதமரின் பலவீனம் குறித்து அதிருப்தி அடைந்ததால், தேசியக் கூட்டணி மற்றும் அதன் உறுப்புக் கட்சிகளுக்கு இடையிலான பிளவுகளைத் தொடர்ந்து, தற்போதைய அரசியல் சூழ்நிலை குறித்து டிஏபி நிலைப்பாட்டை ஊடகங்கள் என்னிடம் கேட்டன.
“இருப்பினும், தனிநபர்களின் பிழைப்பு மற்றும் அவர்களின் சொந்த அரசியலுக்காக மட்டுமல்லாமல், நாடு மற்றும் மக்கள் நலனைப் பேணும் ஒரு பொறுப்பான அரசாங்கத்திற்காக மக்கள் ஏங்கும்போது, கட்சியின் நிலைப்பாட்டை மீண்டும் மீண்டும் சொல்லத் தேவையில்லை,” என்று அவர் கூறினார்.
ஆண்டு தொடக்கத்தில், பக்காத்தான் ஹராப்பான் கூட்டணி தலைவர்களுடன் கலந்தாலோசிக்காமல், தனக்குப் பிறகு பிரதமராக அன்வர்தான் வருவார் எனும் கொடுத்த வாக்குறுதியை மறந்து, மகாதீர் எப்படி பதவி விலகினார் என்பது குறித்தும் ராம்கர்ப்பால் கேள்வி எழுப்பினார்.
“அவர் பிரதமர் பதவியை இராஜினாமா செய்தார். அப்போது அவருக்குப் பெரும்பான்மை இல்லை என்று கூறப்பட்டதால், பதவியை இராஜினாமா செய்ததாகச் சொன்னார்… அவர் தனது அரசாங்கத்துடனோ அல்லது அமைச்சரவையுடனோ பேச்சுவார்த்தை நடத்துவதில் அக்கறை காட்டவில்லை. மாறாக, சொந்த விருப்பத்திற்குச் செய்தார்.
“இப்போது அவர் மீண்டும் பிரதமராக விரும்புகிறார். ஒரு மலேசியன் என்ற வகையில், நான் என்னையே கேட்டுக்கொள்கிறேன், தகுதியான வேறு யாரும் இங்கு இல்லையா?
“அன்வரிடம் பதவியை ஒப்படைப்பேன் என்று அவர்தான் வாக்குறுதியளித்தார், ஆனால் இன்று அவரே, அன்வர் அப்பதவிக்கு ஏற்றவர் அல்ல என்று சொல்கிறாரா?
“அன்று அவரை ஆதரித்ததற்குக் காரணம் என்ன? மக்கள் ஆதரவைப் பெறவா?” என்று ராம்கர்ப்பால் கேள்வி எழுப்பினார்.
மகாதீர் பிரதமராக இருந்த காலகட்டத்தில், அவரால் கைது செய்யப்பட்ட அரசாங்க விமர்சகர்கள் குறித்தும் ராம்கர்ப்பால் பேசினார்.
14-வது பொதுத் தேர்தலுக்கு முன், பல வாக்குறுதிகளை மகாதீர் கொடுத்தார், ஆனால் அவற்றை நிறைவேற்றாமல், ‘தேர்தலில் வெற்றி பெறுவோம் என்று எதிர்பார்க்கவில்லை’ என்று மலுப்பினார்.
“அப்போது நான் அவரை நம்பினேன்.
“இன்று அவர் உண்மையில் அன்வர் இல்லாத ஓர் அரசாங்கத்தையே விரும்புகிறார், ஆக இங்கு ஒரு கேள்வி எழும்புகிறது : அன்று நீங்கள் அவருக்குப் பிரதமர் பதவியைக் கொடுப்பதாக பொய் சொன்னது ஏன்?
“கடந்த காலத்தில் நீங்கள் செய்ததை நான் மதிக்கிறேன். நீதித்துறையை நீங்கள் அழித்தீர்கள், உங்களை எதிர்த்ததால் பலரைச் சிறையில் அடைத்தீர்கள். உள்நாட்டு பாதுகாப்பு சட்டம் (ஐஎஸ்ஏ) உங்கள் நினைவில் இருக்கிறதா?” என்று அவர் மேலும் கேள்வி எழுப்பியுள்ளார்.