பி.கே.பி.பி. சிலாங்கூரில் தொற்று வீதத்தைக் குறைத்துள்ளது

சிலாங்கூரில், ஒரு வாரத்திற்கு செயல்படுத்தப்பட்ட நிபந்தனைக்குட்பட்ட நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை (பி.கே.பி.பி.), கோவிட் -19 நோய்த்தொற்றின் வீதத்தைக் குறைப்பதில் சாதகமான விளைவைக் காட்டுகிறது.

சுகாதாரத் தலைமை இயக்குநர் டாக்டர் நூர் ஹிஷாம் அப்துல்லா, சிலாங்கூரில் தொற்று வீதம் 1.98-லிருந்து 1.48 ஆக குறைந்துள்ளதாகக் கூறினார்.

“ஆனால், பொருளாதாரத் துறையைச் செயல்பட அனுமதிக்கும் பி.கே.பி.பி. நடைமுறையில் நாம் மாற்றம் செய்யாமல் இருக்க வேண்டும். நாம் அதை மேம்படுத்த வேண்டும், விளையாட்டு மற்றும் கல்வி போன்ற சமூகத் துறைகளில் கட்டுப்பாடுகளை நாம் இறுக்க வேண்டும்.

“எனவே, சமூகத் துறை சார்ந்த நடவடிக்கைகள் தற்காலிகமாக ஓரிரு வாரங்கள் இடைநிறுத்தப்பட்டால், தொற்று பதிவுகளைக் குறைக்கலாம் என்று நான் நினைக்கிறேன்,” என்று அவர் மலேசிய சுகாதார அமைச்சகத்தில், நேற்று நடைபெற்ற கோவிட் -19 இன் வளர்ச்சி குறித்த செய்தியாளர் கூட்டத்தில் கூறினார்.

“நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணைக்குப் (பி.கே.பி.) பதிலாக, பி.கே.பி.பி. நடைமுறையைப் பின்பற்றலாம் என்று நாம் முடிவு செய்தோம். பி.கே.பி. குறுகிய காலத்தில் பயனுள்ளதாக இருக்கும், ஆனால் நாட்டில் அனைத்து பொருளாதாரத் துறைகளும் அதனால் பாதிப்பை எதிர்நோக்கும்.

“குறிப்பாக சிலாங்கூரில், மக்கள் நடமாட்டத்தைக் குறைக்கவும் கட்டுப்படுத்தவும் முடிந்தால், அது ஒரு சிறந்த தீர்வாக அமையும்.

“ஆனால், நாம் வீட்டிலேயே உட்கார்ந்து, நோய்த்தொற்றின் சங்கிலியை உடைக்க முடியுமா என்பதைப் பொறுத்துதான் அது அமையும்,” என்று அவர் கூறினார்.

  • பெர்னாமா