பிஎன் சார்பு தலைவர்களை முஹைதீன் சந்தித்தார், ஜாஹித் வரவில்லை

இன்று காலை, தேசியக் கூட்டணி (பி.என்) அரசாங்கத்தை ஆதரிக்கும் கட்சித் தலைவர்களுடன், புத்ராஜெயாவில் உள்ள தனது அலுவலகத்தில் பிரதமர் முஹைதீன் யாசின் ஒரு சந்திப்பை நடத்தினார்.

இருப்பினும், அம்னோ தலைவர் அஹ்மத் ஜாஹித் ஹமிடி அக்கூட்டத்தில் கலந்து கொள்ளவில்லை என்று வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

சிறப்பு அமைச்சரவைக் கூட்டத்திற்கு முன்னதாக, காலை 9.30 மணியளவில் அக்கூட்டம் நடைபெற்றது.

“சபா மற்றும் சரவாக் உள்ளிட்ட அனைத்து கட்சித் தலைவர்களும் இன்று காலை கூட்டத்தில் கலந்துகொண்டனர். அம்னோ தலைவர் அஹ்மத் ஜாஹித் ஹமிடி மட்டுமே கலந்துகொள்ளவில்லை,” என்று மலேசியாகினியிடம் தெரிவிக்கப்பட்டது.

இன்று காலை, தனிப்பட்ட முடிவின் அடிப்படையில், கூட்டத்தில் கலந்துகொள்ளும் தனது எண்ணத்தை அந்தப் பாகான் டத்தோ எம்.பி. மாற்றிக்கொண்டதாக அவருடன் நெருக்கமாக இருக்கும் மற்றொரு வட்டாரம் தெரிவித்துள்ளது.

இதனையடுத்து, வயிற்று வலியின் காரணமாக, தான் கூட்டத்தில் கலந்து கொள்ளவில்லை என்றும், கூட்டத்தில் பி.என். பொதுச்செயலாளர் அன்னுவார் மூசா அவரைப் பிரதிநிதித்துவப்படுத்தியதாகவும் ஜாஹித் தி ஸ்டார் நாளிதழிடம் தெரிவித்துள்ளார்.