தோனி புவா : நஜிப் ஆதரவுடன் அரசாங்கம் அமைப்பது ‘பைத்தியக்காரத்தனம்’

கொள்கையற்ற சிலர், அதிகாரப் பசியெடுத்து, புதிய அரசாங்கத்தை உருவாக்க நஜிப் ரசாக்கின் ஆதரவைப் பெறவும் தயாராக இருக்கிறார்கள் என டிஏபி பிரச்சாரப் பிரிவு செயலாளர் தோனி புவா கூறியுள்ளார்.

இருப்பினும், அந்த முன்னாள் பிரதமரின் ஆதரவுடன் அரசாங்கத்தை அமைக்கும் திட்டமானது, ‘உண்மையில் பைத்தியக்காரத்தனம்’ என்று அவர் கூறினார்.

“முற்றிலும் பைத்தியக்காரத்தனம். […] அத்தகைய அரசாங்கத்தை நான் ஒருபோதும் ஆதரிக்க மாட்டேன்,” என்று அவர் சற்றுமுன்னர், ஒரு சமூக ஊடகப் பதிவில் கூறினார்.

முஹைதீன் யாசினுக்குப் பதிலாக, பி.கே.ஆர். தலைவர் அன்வர் இப்ராஹிமை பிரதமராக நியமிக்க தேசிய முன்னணி (பி.என்.) ஆதரிக்க வேண்டுமென்ற நஜிப்பின் முன்மொழிவுக்கு தோனி புவா இவ்வாறு கூறியதாகத் தெரிகிறது.

இன்று பிற்பகல், கோலாலம்பூரில் பி.என். எம்.பி.க்கள் இடையே நடந்த சந்திப்பில், இதனை நஜிப் முன்மொழிந்துள்ளார், ஆனால், பி.என். எம்.பி.க்களில் பெரும்பாலோர் இத்திட்டத்தில் மகிழ்ச்சியடையவில்லை.

பெரும்பாலான பி.என். எம்.பி.க்கள், அன்வர் மற்றும் டிஏபி உடனான ஒத்துழைப்பை நிராகரிப்பதாகக் கூறப்படுகிறது.

நஜிப் நாட்டின் மிகப்பெரிய ‘மோசக்காரன்’, அவரின் பல்லாயிரக்கணக்கான பில்லியன் ரிங்கிட் கடனை மக்கள் சுமக்கிறார்கள், உலகெங்கிலும் உள்ள மலேசியர்களை அவர் அவமானப்படுத்தி உள்ளார் என்று புவா கூறினார்.

அப்படியிருந்தும், நஜீப் எந்தவொரு வருத்தத்தையும் தெரிவிக்கவில்லை, குற்றத்தை ஒப்புக்கொள்ளவில்லை, மாறாக, தனது தனிப்பட்ட கணக்கில் வைக்கப்பட்ட பணம் ஏழை அனாதைகளுக்குப் பயன்படுத்தப்பட்டதாக அவர் கூறினார்.

“ஆக, இப்படிபட்ட ஒருவரின் ஆதரவை நம்பியிருக்கும் ஓர் அரசாங்கம் நரகத்திற்குத்தான் செல்ல முடியும். தேசியக் கூட்டணியில் இருக்கும் சில துரோகிகளுக்கு இது நடப்பதை நாம் கண்டுவிட்டோம்,” என்று அவர் கூறினார்.