முன்னாள் பிரதமர் நஜிப் ரசாக், பி.கே.ஆர். தலைவர் அன்வர் இப்ராஹிமுடன் ஒத்துழைக்கும் திட்டத்தைப் பரிசீலிக்க அம்னோவிடம் முன்மொழிந்ததை ஒப்புக்கொண்டார்.
இருப்பினும், டிஏபி அதில் சம்பந்தப்படவில்லை என்பதை நஜிப் வலியுறுத்தினார்.
இன்று தேசியக் கூட்டணி எம்.பி.க்கள் கூட்டத்தில் இந்தத் திட்டம் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
தனது முகநூல் பதிவில், கோவிட் -19 கட்டுப்பாட்டுக்குள் வந்த பின்னர், அடுத்தப் பொதுத் தேர்தலுக்கு ஒரு தேதியைக் கோர வேண்டுமென அம்னோவிடம் தான் முன்மொழிந்ததாகவும் நஜிப் கூறினார்.
தேசியக் கூட்டணி அரசாங்கத்தின் குறைந்தப் பெரும்பான்மையைக் கருத்தில் கொண்டு, நாட்டின் நிலைத்தன்மையை உறுதிசெய்ய, ஓர் அரசாங்கத்தைத் தேர்ந்தெடுக்கும் அதிகாரத்தை மக்களிடமே கொடுக்க வேண்டும், அதற்கு நாடாளுமன்றம் கலைக்கப்படுவதுதான் சிறந்த வழி என்று அவர் அதில் பரிந்துரை செய்துள்ளார்.
“அப்படி என் பரிந்துரையைத் தேசியக் கூட்டணி நிராகரித்தால், அம்னோ, அன்வரின் கட்சி உட்பட பிற கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தத் தயாராக இருக்க வேண்டும்.
“இருப்பினும், அன்வருடனான ஒத்துழைப்பு எனும் எனது திட்டத்தில், டிஏபி கட்சியுடன் தொடர்பு இருக்கக்கூடாது என்ற நிபந்தனையும் உள்ளது. இது இன்றைய கூட்டத்தில் பல முறை வலியுறுத்தப்பட்டது,” என்று அவர் கூறினார்.
அம்னோவின் எதிரிகளாக இருந்தபோதிலும், பிப்ரவரி மாதத்தில் அம்னோவும் தேசிய முன்னணியும் பெர்சத்து தலைவர் முஹைதீன் யாசின் மற்றும் முன்னாள் பி.கே.ஆர். துணைத் தலைவர் மொஹமட் அஸ்மின் அலி ஆகியோருடன் இணைந்து பணியாற்ற இசைந்ததை நஜிப் எடுத்துரைத்தார்.
“15-வது பொதுத் தேர்தல் வரை, நிபந்தனையுடன் பணியாற்ற நாம் ஏன் அன்வருடன் பேச்சுவார்த்தை நடத்த முடியாது?” என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
தற்போது பிரதமர், நிதியமைச்சர், பொருளாதார அமைச்சர் போன்ற பல முக்கியப் பதவிகள் பெர்சத்துவிடமே இருக்கிறது. அம்னோ, பாஸ் அல்லது வேறு எந்த உறுப்புக்கட்சிகளுக்கும் முக்கியப் பதவிகள் கொடுக்கப்படவில்லை என்பதைச் சுட்டிகாட்டிய நஜிப், நிதி மற்றும் பொருளாதாரம் சார்ந்த பதவிகளை அம்னோவுக்கு வழங்க வேண்டும் என்பதனை தனது நிபந்தனைகளில் குறிப்பிட்டுள்ளார்.
நிதி மற்றும் பொருளாதாரத் துறைகளில் அம்னோவின் பங்கு இருந்தால், அவை பயனுள்ளப் பொருளாதார ஊக்கத் திட்டத்திற்கு உதவும் என்றும், சபாவுக்குத் தேவையான அவசர உதவிகளை விரைவுபடுத்த முடியும் என்றும் நஜிப் விளக்கினார்.
அம்னோ மற்றும் தேசிய முன்னணிக்குப் பொருளாதார விவகாரங்களில் ஒரு பெரிய பங்கு வழங்கப்படும் என்றால், சில நிபந்தனைகளின் கீழ் தேசியக் கூட்டணிக்குத் தொடர்ந்து ஆதரவளிக்க தயாராக இருப்பதாக நஜிப் கூறினார்.