நாட்டில், இன்று 799 கோவிட் -19 புதியத் தொற்றுகள் பதிவாகியுள்ள நிலையில், கிளந்தான், திரெங்கானு, பெர்லிஸ், பஹாங் மற்றும் மலாக்காவில் புதியத் தொற்றுகள் எதுவும் பதிவாகவில்லை.
466 புதிய சம்பவங்களுடன், சபா தொடர்ந்து அத்தொற்றுக்கு அதிகம் பாதிப்புக்குள்ளான மாநிலமாகத் திகழ்கிறது என்று சுகாதார இயக்குநர் டாக்டர் நூர் ஹிஷாம் அப்துல்லா, புத்ராஜெயாவில் ஊடகவியலாளர்கள் சந்திப்பில் தெரிவித்தார்.
அவசரப் பிரிவில் 90 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர், அவர்களில் 20 பேருக்குச் சுவாசக் கருவியின் உதவி தேவைப்படுகிறது.
இன்று 491 நோயாளிகள் குணமடைந்த வேளை, சபாவில் 3 இறப்புகள் நேர்ந்துள்ளன. அவர்களில் ஒருவர் மலேசியர், மற்ற இருவரும் வெளிநாட்டினர் என்று டாக்டர் நூர் ஹிஷாம் சொன்னார்.
அக்டோபர் மாதத்தில் மட்டும் சபாவில் 104 பேர் இந்த நோயால் இறந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
மேலும் இன்று, 8 புதியத் திரளைகள் கண்டறியப்பட்டுள்ளதாகவும் டாக்டர் நூர் ஹிஷாம் தெரிவித்தார்.
சபாவில் 3 புதியத் திரளைகள் அடையாளம் காணப்பட்டுள்ளன. அவை, மேரா திரளை – தற்காலிக புணர்வாழ்வு மையம், தெலிபோக் திரளை & செம்புலான் திரளை.
அதனையடுத்து, மெர்பாத்தி திரளை – சிலாங்கூர், செப்பாங், கோம்பாக் & கோலா லங்காட் மாவட்டங்கள்; அஸ்தாக்கா திரளை – சிலாங்கூர், பெட்டாலிங், உலு லங்காட் & கோலா சிலாங்கூர் மாவட்டங்கள்; தீதியான் திரளை – லாபுவான், கம்போங் முஸ்லிம்; காலா திரளை – நெகிரி செம்பிலான், சிரம்பான் & ஜெலுபு மாவட்டம்; மெல்ட்ரம் திரளை – ஜொகூர், ஜொகூர் பாரு, கோத்தா திங்கி & தங்காக் மாவட்டம்.
சபாவை அடுத்து, மாநிலம் வாரியாகப் புதியத் தொற்றுகளின் எண்ணிக்கை :-
சிலாங்கூரில் 150, லாபுவானில் 65, பினாங்கில் 35, நெகிரி செம்பிலானில் 23, கோலாலம்பூரில் 19, சரவாக்கில் 16, பேராக்கில் 10, ஜொகூரில் 9, கெடாவில் 5, புத்ராஜெயாவில் 1.