கோவிட் – 19 : ஜேபி, சமரஹானில் பள்ளிகள் மூடப்படும்

அதிகரித்து வரும் கோவிட் -19 பதிவுகளின் காரணத்தால், ஜொகூர் பாருவில் உள்ள பள்ளிகளை மூடுமாறு கல்வி அமைச்சு உத்தரவிட்டுள்ளது.

29 அக்டோபர் முதல் கோவிட் -19 சிவப்பு மண்டலமாக, ஜொகூர் பாரு மாவட்டம் வகைப்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து, நவம்பர் 1 முதல் நவம்பர் 14 வரை இந்த உத்தரவு அமலுக்கு வருகிறது.

“இது ஜொகூர் பருவில் உள்ள 376 கல்வி நிறுவனங்களை உள்ளடக்கியது. இந்த எண்ணிக்கையில் கல்வி அமைச்சின் கீழ் இயங்கும் ஆரம்ப மற்றும் இடைநிலைப் பள்ளிகள், ஆசிரியர் கல்வி நிறுவனங்கள் மற்றும் கல்வி அமைச்சில் பதிவுசெய்யப்பட்ட தனியார் பள்ளிகள் ஆகியவை அடங்கும்,” என்று அமைச்சு நேற்று ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளது.

முந்தையப் பள்ளி மூடல்களைப் போலவே, பெற்றோர்களும் பாதுகாவலர்களும் தங்கள் குழந்தைகளை விடுதி வசதிகளைக் கொண்ட பள்ளிகளிலிருந்து வீட்டிற்கு அழைத்துச் செல்லலாம் என்று கல்வி அமைச்சு கூறியது.

பெற்றோருக்காகக் காத்திருக்கும் பிள்ளைகள், அவர்கள் வரும்வரையில், பள்ளி விடுதிகளிலேயே இருக்கலாம், அவர்களை விடுதியின் வார்டன் கவனித்துகொள்வார். மாணவர்களுக்குத் தேவையான உணவை, பள்ளி நிர்வாகம் ஏற்பாடு செய்து தரும்.

எவ்வாறாயினும், பள்ளிகள் மூடப்பட்ட காலக்கட்டத்தில், வார்டன்களின் பராமரிப்பின் கீழ், மாணவர்கள் விடுதிகளிலும் தங்கலாம் என்றும் கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

இக்காலகட்டத்தில் திட்டமிடப்பட்டபடி சர்வதேச தேர்வுகளுக்கு அமர வேண்டிய மாணவர்கள், அந்தந்தப் பள்ளிகளிடமிருந்து தேர்வில் கலந்துகொள்ள ஓர் அனுமதி கடிதத்தைப் பெற வேண்டும் என்றும் அது கூறியுள்ளது.

இதற்கிடையில், சிவப்பு மண்டலமாக அறிவிக்கப்பட்டுள்ள கூச்சிங் மாவட்டத்தில் பள்ளிகள் மூடப்பட்டதைத் தொடர்ந்து, சமரஹான் மாவட்டத்தில் உள்ள மூன்று பள்ளிகளை மூடுமாறு சரவாக் மாநிலப் பேரிடர் மேலாண்மை குழு உத்தரவிட்டதாக பெர்னாமா தெரிவித்துள்ளது.

படிவம் 4 மாணவர்களுக்கான சிறப்பு பள்ளி நுழைவு மதிப்பீடுகளை (பி.கே.எஸ்.கே) ஒத்திவைப்பதாகவும் கல்வி அமைச்சு ஒரு தனி அறிக்கையில் தெரிவித்துள்ளது.

நவம்பர் 2 ஆம் தேதி தொடங்க திட்டமிடப்பட்டிருந்த மதிப்பீடுகள், இப்போது கோவிட் -19 சூழ்நிலையின் காரணமாக, பின்னர் அறிவிக்கப்படும் ஒரு தேதியில் நடைபெறும்.