நாளை, 2021 வரவுசெலவுத் திட்டம் குறித்து விவாதிக்க, நிதியமைச்சர் தெங்கு ஜஃப்ருல் அஜீஸ் பல பக்காத்தான் ஹராப்பான் (பி.எச்.) தலைவர்களைச் சந்திக்க உள்ளதாகக் கூறப்படுகிறது.
2021 வரவுசெலவுத் திட்டம் குறித்து எதிர்க்கட்சிகளுடன் கலந்துரையாடுமாறு, பிரதமர் முஹைதீன் யாசினுக்குப் பி.எச். தலைமை மன்றம் வலியுறுத்திய பின்னர் இச்சந்திப்பு ஏற்பாடாகியுள்ளது.
“அமைச்சர் நாளை, ஞாயிற்றுக்கிழமை, புத்ராஜெயாவில் உள்ள நிதி அமைச்சக அலுவலகத்தில் பி.எச். தலைவர்களைச் சந்திப்பார்.
“பிற்பகல் 3 மணி முதல் மாலை 5 மணி வரை, இரண்டு மணி நேரம் நடைபெறவுள்ள இந்தக் கலந்துரையாடலில் கலந்துகொள்ள, மொத்தம் 10 தலைவர்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்டுள்ளனர்,” என்று பிரதமர் அலுவலகத்திற்கு நெருக்கமான ஒரு வட்டாரம் மலேசியாகினியிடம் தெரிவித்தார்.
ஜாஃப்ருல், மூவார் நாடாளுமன்ற உறுப்பினர் சையத் சதிக் மற்றும் வாரிசான் துணைத் தலைவர் டேரல் லெய்கிங் ஆகியோரை வெள்ளிக்கிழமை சந்தித்ததாக நிதி அமைச்சக அலுவலகத்தின் அதிகாரி ஒருவர் விளக்கினார்.
இதற்கிடையில், பி.கே.ஆர். பொதுச்செயலாளர் சைபுதீன் நாசுதியோன் இஸ்மாயிலை தொடர்பு கொண்டபோது, கூட்டத்திற்கான அழைப்பை அவரது கட்சி ஏற்றுக்கொண்டதை உறுதிப்படுத்தினார்.