குவான் எங் : சொந்த அரசியல் பிழைப்புக்கு முன்னுரிமை கொடுப்பதை நிறுத்துங்கள்

பிரதமர் முஹைதீன் யாசின் தனது சொந்த அரசியல் பிழைப்புக்கு முன்னுரிமை கொடுப்பதை நிறுத்த வேண்டும், அதற்குப் பதிலாக இப்போது மூன்றாவது அலைக்குள் நுழைந்து வரும் கோவிட் -19 தொற்றை எதிர்த்துப் போராடுவதற்கான முயற்சிகளில் அதிகக் கவனம் செலுத்த வேண்டும் என்று டிஏபி பொதுச்செயலாளர் லிம் குவான் எங் கூறினார்.

மாமன்னரிடம் கூறியதைப் போல, நாட்டில் அவசரநிலை தேவைப்படுகிறது என்பதற்கான காரணத்தைத் தெரிவிக்க அந்தப் பெர்சத்து தலைவர் இன்னும் விரும்புவதாகத் தெரிகிறது என்று லிம் கூறினார்.

லிம்`மைப் பொறுத்தவரை, அவசரநிலை பிரகடனம் நாட்டில் பொருளாதாரம், முதலீட்டாளர்களின் நம்பிக்கை, ஜனநாயக அமைப்பு மற்றும் தேசிய ஒற்றுமை ஆகியவற்றில் எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தும்.

“அரச ஆணையை முஹைதீன் மதிக்க வேண்டும்,” என்றார் அவர்.

அவசரகால நிலையை அறிவிக்க முஹைதீன் அளித்த காரணங்கள் – அதாவது சபாவில் பத்து சாபி இடைத்தேர்தல் மற்றும் சரவாக் மாநிலத் தேர்தல் ஆகியவற்றைத் தவிர்ப்பது – அபத்தமானவை, நியாயமற்றவை என்று பாகன் எம்.பி.யுமான லிம் தெரிவித்தார்.

அம்னோ துணைத் தலைவர் மொஹமட் ஹசான் அவர்களே, பத்து சாபி இடைத்தேர்தல் நடைபெறுவதைத் தடுக்க வேறு வழி இருப்பதாக நினைக்கிறார்; அதாவது, வாரிசான் அந்த இடத்தைத் தக்க வைத்துக் கொள்ளும் வகையில், அனைத்து கட்சிகளும் தேர்தலில் போட்டியிடுவதிலிருந்து விலகிக்கொண்டால், தேர்தல் நடைபெறாது என்று அவர் ஆலோசனை கூறியுள்ளார் என லிம் தெரிவித்தார்.