இன்று காலை தொடங்கி, மாலை 5 மணிக்கு முடிவடையவிருந்த மக்களவை அமர்வு, மதியம் 1 மணிக்கே ஒத்துவைக்கப்பட்டது. இவ்வாரம் மதியம் 1 மணி வரை மட்டுமே அமர்வு இருக்குமெனத் திட்டமிடப்பட்டுள்ளது.
பிரதமர் துறை அமைச்சர், தக்கியுதீன் ஹாசன், இதனை முன்மொழிந்தபோது, சில நாடாளுமன்ற ஊழியர்களுக்குக் கோவிட் -19 தொற்று கண்டுள்ளதாகத் தெரிவித்தார்.
மக்களவை நீண்ட நேரம் நடந்தால் ஆபத்து மிக அதிகம் என்று சுகாதார தலைமை இயக்குநர் டாக்டர் நூர் ஹிஷாம் அப்துல்லா தெரிவித்ததைத் தொடர்ந்து, இது முன்மொழியப்பட்டதாகவும் தக்கியுதீன் கூறினார்.
“ஆபத்து மிக அதிகமாக உள்ளது என்று சுகாதார அமைச்சினால் அறிவுறுத்தப்பட்டுள்ளோம், இடையில் கண்ணாடிகள் இருப்பினும், நமது அமர்வு மூடிய இடத்தில் நடைபெறுகிறது, இது தொற்று பரவலை தடுக்க எவ்வளவு பாதுகாப்பானது (தெரியவில்லை).
“ஆனால், இந்த சூழ்நிலையில் நாம் நீண்ட நேரம் ஒன்றாக இருப்பதால் ஆபத்து மிக அதிகம் என்று சுகாதார அமைச்சு கூறுகிறது, அதன் அடிப்படையில் இந்த விஷயத்தை எந்தவித பாரபட்சமும் இல்லாமல் இங்கு பரிந்துரைக்கிறோம்,” என்று அவர் கூறினார்.
ஆயினும், எத்தனை மக்களவை ஊழியர்கள் தொற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பதைத் தக்கியுதீன் உறுதிப்படுத்தவில்லை.
“நாங்கள் இந்த விஷயத்தைப் பொது நலன் கருதி அறிவிக்கக்கூடாது,” என்றார் அவர்.