`பெஜூவாங்’ கட்சியிலிருந்து மஸ்லீ மாலிக் வெளியேறினார்

சிம்பாங் ரெங்கம் எம்.பி. மஸ்லீ மாலிக், இன்று பெஜுவாங் கட்சியிலிருந்து விலகுவதாக அறிவித்தார்.

நேற்று கட்சி வெளியிட்ட ஊடக அறிக்கையில், அவரது பெயர் இல்லாதது குறித்த கேள்விக்குப் பதிலளிக்கையில் மஸ்லீ இந்த விஷயத்தை அறிவித்தார்.

“நான், சிம்பாங் ரெங்காமின் நாடாளுமன்ற உறுப்பினர், மஸ்லீ மாலிக், பெஜுவாங் கட்சியிலிருந்து விலகுவதை இதன்மூலம் அறிவிக்கிறேன்.

“கல்வி மாற்ற இயக்கத்தில், எனது பணியை ஒரு சுயேட்சை எம்.பி.யாகவும், தேசியப் பணிகளைத் தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் அல்லது ஆர்வலர்கள் மூலமாகவும் தொடருவேன்,” என்று அவர் இன்று ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

நேற்று, பெஜுவாங் வெளியிட்ட ஊடக அறிக்கையில், கட்சியின் மற்ற எம்.பி.க்களுடன் மஸ்லீயின் பெயர் பட்டியலிடப்படாதது கேள்வியை எழுப்பியது.

பி.கே.ஆர் தலைவர் அன்வர் இப்ராஹிமுக்கு ஆதரவான ஒரு துணை ஆவணத்தை விநியோகித்தது தொடர்பான சர்ச்சையில் மஸ்லீ முன்பு பேசப்பட்டார்.

நாட்டின் அரசியல் நெருக்கடிகளுக்கு மத்தியில், அன்வர் பிரதமராவதற்கு ஆதரவாக மஸ்லீ கையெழுத்திட்டதாகக் கூறப்படும் உறுதிமொழி அறிக்கை ஒன்று, பரவலாகப் பேசப்பட்டது.

கடந்த அக்டோபர் 17-ம் தேதி, ஊடகங்களால் பரப்பப்பட்ட அந்த அறிக்கை குறித்து, இதுவரை மஸ்லீயிடமிருந்து எந்தப் பதிலும் வரவில்லை.

இதற்கிடையில், மஸ்லீ தனது முடிவு, கள ஆய்வுகள் மற்றும் மக்களின் தேவைகள் குறித்த ஆய்வுகளின் உண்மை கண்டுபிடிப்புகளின் அடிப்படையில் அமைந்தது என்றார்.

“உயரடுக்கு அரசியல்வாதிகளின் அதிகார அரசியலால், மக்கள் சோர்ந்து போயிருக்கிறார்கள் என்று நான் நம்புகிறேன்.

“மக்கள் இப்போது எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்குச் சேவை செய்வதிலும் உண்மையில் தீர்வு காண்பதில் கவனம் செலுத்தும் அரசியல்வாதிகளையே மக்கள் விரும்புகிறார்கள்,” என்று அவர் மேலும் கூறினார்.