பி.கே.ஆர். எம்பி : மக்களவை விரைவில் ஒத்திவைப்பு, வேறு காரணங்கள் இருக்கலாம்

மக்களவைக் கூட்டத்தொடர், கோவிட் -19 தொற்றின் காரணமாக, 3 மணி நேரம் முன்னதாக ஒத்திவைக்கப்படுகிறது எனும் காரணத்தைத் தவிர்த்து, வேறு ஏதேனும் நோக்கம் உண்டா என, பத்து நாடாளுமன்ற உறுப்பினர், பி பிரபாகரன் கேள்வி எழுப்பியுள்ளார்.

“நாடாளுமன்றக் கூட்டத்தொடரை முன்னதாக முடிவுக்கு கொண்டுவர வேண்டும் எனும் இன்றைய முடிவிற்குப் பின்னால் வேறு நோக்கங்களும் இருக்கலாம், கோவிட் -19 அச்சம் மட்டும் காரணமல்ல.

“மக்களவைக் கூட்டத்தை, காலை 10 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை குறைப்பதன் மூலம், கோவிட் -19 பரவலை எந்த அளவிற்கு நீங்கள் கட்டுப்படுத்த முடியும்? இதில் என்ன வித்தியாசம்?” என்று, இன்று ஓர் அறிக்கையில் பிரபாகரன் கேள்வி எழுப்பியுள்ளார்.

இக்கூட்டத்தொடரில், தீர்க்கப்படாத பல பிரச்சினைகள் மற்றும் நிலுவைகள் குறித்து கேள்விகள் எழுப்பப்படவுள்ளது என்று பிரபாகரன் கூறினார்.

“கூட்டத் தொடரின் நேரத்தைக் குறைப்பது அதற்கு உதவாது. மக்களின் பிரச்சினைகளுக்கு முன்னுரிமை கொடுக்கப்பட வேண்டும்.

“எதிர்க்கட்சிகள் கொண்டு வந்த சில திட்டங்களைப் புதைப்பதற்கான மற்றொரு அரசியல் உத்தி இதுவாக இருக்காது என்று நம்புகிறேன்,” என்று அவர் கூறினார்.

மக்களவை அமர்வின் முதல் நாளான இன்று, பிற்பகல் 1 மணிக்கு கூட்டம் ஒத்திவைக்கப்பட்டதைத் தொடர்ந்து அவர் இதனைத் தெரிவித்தார்.

இந்த நேரக் குறைப்பு நடவடிக்கை, இந்த வார அமர்வுக்கு மட்டுமே என்று அவர் மேலும் கூறினார்.

இதற்கிடையில், நாடாளுமன்றத்திற்கு வருபவர்கள் அனைவரும், இரண்டாவது முறையாக கோவிட் -19 சோதனையைச் செய்ய வேண்டும் என்றும் பிரபாகரன் பரிந்துரைத்தார்.

“எம்.பி.க்களும் அவர்களது அதிகாரிகளும் வழிகாட்டுதல்களின்படி, மக்களவையில் நுழைவதற்கு முன்பு பிணிப்பாய்வு (ஸ்கிரீனிங்) செய்யப்படுவதை நாம் உறுதிசெய்ய வேண்டும்.

“ஒவ்வொரு வாரமும், எம்.பி.க்கள், அவர்களின் அதிகாரிகள் மற்றும் நாடாளுமன்ற ஊழியர்களுக்குப் பிணிப்பாய்வு செய்ய வேண்டும், இதன்வழி மாநாட்டை நாம் பாதுகாப்பாகத் தொடர முடியும்,” என்றும் அவர் கூறினார்.